ரூ.1000 கோடி வசூலை குவித்த இந்திய படங்கள்… கணக்கை தொடங்காத தமிழ் சினிமா
|தமிழ் சினிமாவில் எந்த திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை குவிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
சென்னை,
இந்திய சினிமாவில் ரூ.1000 கோடி வசூலை ஈட்டியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட படங்களின் எண்ணிக்கை 5 ஆகும். அதில் இரண்டு பாலிவுட் படங்கள். டோலிவுட்டில் இரண்டு படங்களும், கன்னட சினிமாவில் இருந்து ஒரு படமும் என மொத்தம் 5 படங்கள் ரூ.1000 கோடி வசூலை குவித்துள்ளன.
பாலிவுட்டில் அமீர்கான் நடித்த விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தங்கல் படமும், சமீபத்தில் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான பதான் படமும் ரூ.1000 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
அதேபோல, டோலிவுட்டில் ராஜமவுலி இயக்கி பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை குவித்தது. அதே ராஜமவுலி இயக்கி, ஜூனியர் என்.டி.ஆர்., மற்றும் ராம்சரண் ஆகியோர் நடிப்பில் உருவான ஆர்.ஆர்.ஆர். திரைப்படமும் ரூ.1000 கோடி வசூலை ஈட்டியது.
கன்னட சினிமா தரப்பில் அதிக மாஸ் காட்சிகளுடன் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் ரூ.1000 கோடியை வசூலித்து சாதனை படத்தது.
தமிழ் சினிமா தரப்பில் சங்கர் இயக்கி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் ரூ.1000 கோடியை நெருங்கியது. மற்ற திரைப்படங்கள் அனைத்தும் ரூ.400 கோடி, ரூ.500 கோடி என்ற அளவில் வசூலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் எந்த திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை குவிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.