'எங்க தப்பு நடந்தாலும் கண்டிப்பா நா வருவேன்' - இந்தியன்-2 படத்தின் அறிமுக வீடியோ வெளியானது..!
|'இந்தியன்-2' படத்தின் அறிமுக விடியோவை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் 'இந்தியன்-2'. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருப்பதி, தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. இதனிடையே சமீபத்தில் படத்தின் டப்பிங் பணிகளை கமல்ஹாசன் தொடங்கினார்.
இந்நிலையில் 'இந்தியன்-2' படத்தின் அறிமுக வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். 'எங்க தப்பு நடந்தாலும் கண்டிப்பா நா வருவேன்' என்று தொடங்கும் அறிமுக வீடியோவில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், மனோபாலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், இந்த அறிமுக வீடியோவை இந்தி மொழியில் நடிகர் அமீர்கானும், தெலுங்கில் இயக்குனர் ராஜமவுலியும், மலையாளத்தில் நடிகர் மோகன்லாலும், கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப்பும் வெளியிட்டனர்.