'இந்தியன் 2' படத்தின் முதல் பாடல் 'பாரா' வெளியாகும் நேரம் அறிவிப்பு
|'இந்தியன் 2' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் நேரத்தை படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
சென்னை,
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
தற்போது இதன் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திரைப்படம், பின்னர் ஒரு சில காரணங்களால் தாமதமானது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இதையடுத்து இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, 'இந்தியன் 2' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்திருந்தது. தற்போது முதல் பாடல் 'பாரா' வெளியாகும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மாலை 5 மணிக்கு 'பாரா' பாடல் வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை மாதம் 12-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.