வானவில் போன்று பல கலாசாரங்களைக் கொண்டது இந்தியா - ஏ.ஆர். ரகுமான்
|இந்தியா வானவில் போன்ற பல கலாசாரங்களைக் கொண்டது என ஏ.ஆர். ரகுமான் பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை,
1992-ல் மணிரத்னத்தின் "ரோஜா" படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், ஏ.ஆர். ரகுமான். முதல் படத்திலேயே தேசிய விருது மற்றும் பிலிம்பேர் கோப்பையை வென்றார். படிப்படியாக முன்னேறி, தென்னிந்திய திரையுலகம் முதல் ஹாலிவுட் வரை பணியாற்றியுள்ளார் . இவரின் இசைப்பயணம் மூன்று பத்தாண்டுகளை தொட உள்ளது.
ஏ.ஆர். ரகுமான் 2009-ல் "ஸ்லம்டாக் மில்லியனர்" படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றார். மேலும் இவர் அதே படத்திற்காக கிராமி மற்றும் கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றுள்ளார். தற்போது அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, குஜராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஏ.ஆர். ரகுமான் அளித்த ஒரு பேட்டியில், "வானவில்லில் பல வண்ணங்கள் இருப்பதைப் போல, இந்தியாவில் வெவ்வேறு கலாசாரங்கள், மொழிகள் மற்றும் திரையுலகம் ஆகியவை உள்ளன. அதை உலகம் ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் இது. தெலுங்குப் படமான "ஆர்.ஆர்.ஆர்."-ன் 'நாட்டு நாட்டு' பாடலுக்கான விருது, இந்தியாவின் திறமையாளர்களின் பன்முகத் திறனை பறை சாற்றும் ஒன்று.
'பாலிவுட்' என்று நாம் அழைக்கும் இந்தி திரைப்படத் துறை மட்டுமே தற்போதைய திரைப்படத் துறை என்று உலகம் நம்புகிறது. இருப்பினும் தெலுங்குப் பாடலான 'நாட்டு நாட்டு' ஆஸ்கார் விருதை வென்றதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
நான் எப்போதுமே வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்புவேன். அதன்மூலம் எனக்கு சிறப்பு கிடைத்தது. இசைக்கலைஞர்கள் பண்டைய கால கவிதைகள் மற்றும் ராகங்களுக்கு திரும்பி செல்ல வேண்டும். 3,000 ஆண்டுகள் பழமையான ராகங்களையோ, இலக்கியங்களையோ, கவிதைகளையோ மக்கள் ஏற்றுக் கொள்ளாததை என்னால் காண முடிகிறது.
நான் அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்துகிறேன். ஏன் சென்னையில் இல்லை? என்று மக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மற்ற நகரங்கள் மற்றும் நாடுகளுக்குச் செல்வதற்கு முன், ஆகஸ்டு 12 ஆம் தேதி முதலாவதாக சென்னையில் "மறக்குமா நெஞ்சம்" பாடல் அரங்கேறுகிறது.
அதற்கான 40,000 டிக்கெட்டுகள் விற்று விட்டன. இதை என்னால் நம்ப முடியவில்லை. சென்னையில் பெரிய கச்சேரிகளுக்கு உள்கட்டமைப்புகள் இல்லை. எனவே "மறக்குமா நெஞ்சம்" ஒரு பெரிய கச்சேரி நடத்துவதற்கான சோதனை போன்றது" என்றார்.