'இங்க நான் தான் கிங்கு' படத்தில் ஹீரோ என்னவோ நான்தான் ஆனால் கிங்கு அன்புசெழியன்தான் - சந்தானம்
|அன்புசெழியன் தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ, அவர் ஆபிஸுக்கு வராத ஹீரோவே இல்லை என்று சந்தானம் 'இங்க நான் தான் கிங்கு' படத்தின் தயாரிப்பாளரை புகழ்ந்துள்ளார்.
கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம், 'இங்க நான் தான் கிங்கு'. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மே 10 அன்று பிரமாண்டமான முறையில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இயக்குநர் ஆனந்த் நாராயண் பேசியதாவது '' இதுவரையிலும் படத்திற்கு ஆதரவு தந்து வரும் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் அன்பு சார் கதை கேட்கிறார் என்றதும் அவரை நெருங்க முயற்சித்தேன். செந்தில் சார் மூலம் தான் அவரை சந்தித்தேன். ஒரு படம் செய்வதாக கதை சொன்னார்கள், உடனே ஒப்புக்கொண்டேன். எனக்காக முழு டீமையே கொடுத்தார்கள். சந்தானம் சாரை 'இந்தியா பாகிஸ்தான்' படத்திற்காக சந்தித்துள்ளேன், அவருக்கு நான் ரசிகன். இப்போது அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. முதல் நாளே என்னைக் கூப்பிட்டு பாராட்டினார். ஷூட்டிங்கில் செட்டிலேயே இருந்து என்னுடன் விவாதிப்பார். அவர் டீமுக்கு முக்கியமாக நன்றி. இமான் மியூசிக் அட்டகாசமாக வந்துள்ளது. சந்தானம் சார் எமோஷன் காட்சி ஒன்று இருக்கிறது, அதில் சந்தானம் சாரா இசையா என போட்டியே இருக்கும். சந்தானம் சாருக்கு இணையாக புதுமுகம் லயா சூப்பராக நடித்துள்ளார். தம்பி ராமையா சார் அருமையாக நடித்துள்ளார். கண்டிப்பாக குடும்பத்தோடு சந்தோஷமாக கொண்டாடும் படமாக இது இருக்கும், அதற்கு ரைட்டருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். படம் பார்த்து ஆதரவு தாருங்கள்" என்று கூறினார்..
இசையமைப்பாளர் இமான் பேசியதாவது '' கோபுரம் பிலிம்ஸில் 'வெள்ளக்கார துரை' படம் செய்துள்ளேன். ஒரு இடைவேளைக்குப் பிறகு அன்புசெழியன் சாருடன் இணைகிறேன். என் மீது அவருக்கு தனித்த அன்பு இருக்கிறது. அவர் எல்லாப் படத்திலும் என் இசை இருக்க வேண்டுமென நினைப்பார். சந்தானம் சார் காமெடி தான் என் வீட்டில் ஓடிக்கொண்டே இருக்கும், அவருடன் வேலை பார்க்க வேண்டுமென பல காலமாக ஆசைப்பட்டேன், அது இந்தப்படத்தில் அமைந்தது மகிழ்ச்சி. ஒரு ஹீரோயினுக்கு ஒரு வெற்றிப்பாடல் அமைந்தால் அது மிகப்பெரிய விளம்பரமாக இருக்கும் 'மாயோன்...' பாடல் லயாவுக்கு மிக அருமையான பாடலாக அமைந்துள்ளது. சந்தானம் சாரும் கலக்கியுள்ளார். இப்படத்தில் மூன்று பாடல்கள். 'மாயோன்...' எனக்கு நெருக்கமான பாடல், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பாடியுள்ளார், அவருக்கு நன்றி. இந்தப்படத்தில் காமெடியைத் தாண்டி எமோஷனல் காட்சிகளிலும் சந்தானம் அசத்தியுள்ளார். இசையில் பல காட்சிகள் சவாலாக இருந்தன " என்று கூறினார்..
தயாரிப்பாளர் அன்புசெழியன் பேசியதாவது '' சந்தானம் சாரை வைத்து ஒரு படம் செய்ய ஆசைப்பட்டேன். கொஞ்ச காலம் தயாரிப்பில் இல்லை. இந்தக்கதை வந்த போது சந்தானம் சரியாக இருப்பார் எனத் தோன்றியது. அவர் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார். என்னுடைய பார்ட்னராக சரிகமா ஆனந்த் இணைந்துள்ளார், அவருக்கு நன்றி. தம்பி ராமையா சார், நாயகி லயா, கூல் சுரேஷ் எல்லோருக்கும் வாழ்த்துகள். இமான் சார் அருமையான பாடல்கள் தந்துள்ளார். சந்தானம் சார் இந்தப்படத்திற்காக ஸ்பெஷலாக உழைத்து தந்தார், நன்றி.
முதன் முதலாக தனது எக்ஸ் தளத்தில் இப்படத்தைப் பற்றி பதிவிட்டு எங்களுக்கு ஆதரவு தந்த உலக நாயகன் கமலஹாசன் சாருக்கு நன்றி. என் மகள் சுஷ்மிதா இப்படம் மூலம் திரைத்துறைக்கு வந்துள்ளார் அவருக்கு ஆதரவு தாருங்கள். படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி " என்று கூறினார்.
நடிகர் சந்தானம் பேசியதாவது '' 'இங்க நான் தான் கிங்கு' படத்தில் ஹீரோ என்னவோ நான் தான் ஆனால் கிங்கு அன்புசெழியன் சார் தான். தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ அவர் தான். அவர் ஆபிஸுக்கு வராத ஹீரோவே இல்லை. அவரிடம் நானே காசு கேட்டுதான் போனேன், என்னை அவருக்கு பிடித்தது, வீடு வாங்க காசு கேட்டுப்போனேன், ஆனால் அப்படி செய்யாதீர்கள், படத்திற்கு அட்வான்ஸ் தருகிறேன், படம் செய்யலாம் என்றார். அவர் மனதளவில் மிக நல்ல மனிதர். என்னுடன் எப்போதும் ஜாலியாக பேசுவார். அவர் என்னிடம் இந்தப்படம் செய்யலாம் என்றார், எனக்கும் பிடித்திருந்தது என்றவுடன் உடனே செய்யலாம் என்றார். அவருடன் இணைந்து படம் செய்தது சந்தோஷம். படம் பார்க்க வருபவர்கள் சிரித்துவிட்டு போக வேண்டும் என்றார், தயாரிப்பாளராக இல்லாமல் தியேட்டர் ஓனராக இப்படத்தை எடுத்துள்ளார். சுஷ்மிதா என் படம் மூலம் தயாரிப்பாளராக வந்துள்ளார், வாழ்த்துகள். இமான் இதுவரை என் படத்தில் இல்லாத கலரில் எனக்கு மிக வித்தியாசமான இசையை தந்துள்ளார், நன்றி. இயக்குநர் ஆனந்த் அருமையாக படத்தை எடுத்துள்ளார். தம்பி ராமையா சார் மாதிரி இண்டலிஜண்ட் பார்க்க முடியாது, அவருடன் பேசும்போது பிரமிப்பாக இருக்கும் " என்று கூறினார்.
தம்பி ராமையா, சேஷு, முனீஷ்காந்த், கூல் சுரேஷ், பால சரவணன், விவேக் பிரசன்னா, மாறன், சுவாமிநாதன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது.
சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இமானின் இசையில் பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. கதை, திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியுள்ளார்.
'இங்க நான் தான் கிங்கு' திரைப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்கியுள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரித்துள்ளார். மே 10 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.