'இப்போதே எனக்கு பதறுகிறது... தெம்பும், நம்பிக்கையும் இருந்தால்..'- கமல் பரபரப்பு பேச்சு
|இந்தியன் 2 படம் எடுப்பதற்குக் கருவை கொடுத்துக்கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி என்று நடிகர் கமல் ஹாசன் கூறினார்.
சென்னை,
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் ஷங்கர், அனிருத், நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, கமல் ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் நடிகர் கமல் ஹாசன் பேசியதாவது,
'இந்தியன்' படம் வெளியாகி 28 வருடங்கள் கழித்து 'இந்தியன் 2' உருவாகியுள்ளது. நான் மதிக்கும் நல்ல நடிகர்கள், நண்பர்கள் இப்போது எங்களுடன் இல்லை. அவர்கள் அனைவரும் இந்த விழாவில் பங்கேற்றிருக்க வேண்டியவர்கள். நெடுமுடி வேணு, விவேக், மனோபாலா போன்றோர்கள். இப்போதுதான் எடுத்த மாதிரி உள்ளது விவேக்கின் காட்சிகள். காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதற்கு இந்தியன் 1,2 எல்லாம் உதாரணம்.
இந்தியன் 2 படம் எடுப்பதற்குக் கருவை இன்று கொடுத்துக்கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. ஊழல் அதிகமாகி விட்டதால்தான் இந்தியன் தாத்தாவின் இரண்டாம் வருகை. நாம் இல்லாமல் அவர்களால் ஊழல் செய்துவிட முடியுமா தனியா?. அதற்கு நாமும்தான் காரணம். அதையும்தான் இந்த படம் சொல்கிறது. இந்தியன் 4, 5 என்று சொல்லும்போது பதறுது. இந்தியன் 1 எடுக்கும்போது நான் இந்தியன் 2 சொன்னபோது எப்படி இயக்குனர் பதறினாரோ, அப்படி எனக்கு இப்போது பதறுகிறது. இதை பாருங்கள், இதுக்கு அடுத்து வருவதையும் வெற்றி பண்ணுங்க. அதற்கு பின்னர் தெம்பு இருந்தால் எங்களுக்கு, உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அதெல்லாம் நடக்கலாம். இவ்வாறு கூறினார்.