< Back
சினிமா செய்திகள்
மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழா: சிறந்த திரைப்படம்  மற்றும் சிறந்த நடிகைக்கான விருதுகள் அறிவிப்பு
சினிமா செய்திகள்

மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழா: சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகைக்கான விருதுகள் அறிவிப்பு

தினத்தந்தி
|
17 Aug 2024 8:29 PM IST

மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகள் மற்றும் சிறந்த நடிகைக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது.

மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழா கடந்த 2010ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் இத்திரைப்பட விழாவில் திரைத்துறையிலுள்ள சிறந்த படங்களுக்கு விருது கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரில் வைத்து இந்திய திரைப்பட விருது விழா நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15 தொடங்கிய இந்த விழா ஆகஸ்ட் 25 வரை நடைபெறும். இந்நிலையில் நேற்று சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் தெலுங்கு நடிகர் ராம்சரண் இந்திய கலை மற்றும் கலாச்சாரத்திற்கான தூதராக வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து சிறந்த படத்திற்கான விருது '12த் பெயில்' படத்திற்கும் சிறந்த நடிகைக்கான விருது 'உள்ளொழுக்கு' படத்திற்காக பார்வதி திருவோத்துக்கும் சமத்துவ விருது 'டன்கி' படத்திற்கும் பன்முகத்தன்மை சாம்பியன் விருது 'ரசிகா துகல்' படத்திற்காக ஆலியா பட்டுக்கும் அறிவிக்கப்பட்டது. மேலும் விமர்சகர் தேர்வில் சிறந்த நடிகராக '12த் பெயில்' படத்தில் நடித்த விக்ராந்த் மாஸ்ஸிக்கும் சிறந்த படமாக 'லாபாதா லேடீஸ்' படத்திற்கும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து வெப் சீரிஸுக்கு அறிவித்த விருதில், 'போச்சர்' சீரிஸில் நடித்த நிமிசா சஜயன் தேர்வு செய்யப்பட்டார். தமிழ் சினிமா பொறுத்தவரை சிறந்த இயக்குநராக 'மகாராஜா' படத்திற்காக நித்திலன் சாமிநாதனுக்கும் 'எக்ஸலென்ஸ் இன் சினிமா' என்ற கௌரவ விருது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கும் அறிவிக்கப்பட்டது.

சிறந்த திரைப்படத்திற்கான விருதுக்கு தேர்வாகியுள்ள '12-த் பெயில்' படமானது ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் சர்மாவின் வாழ்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

உள்ளொழுக்கு என்பது ஆலப்புழாவில் வெள்ளம் சூழ்ந்த குட்டநாட்டில் நடக்கும் உணர்ச்சிகரமான நாடகமாகும். இதில் பார்வதி கதாநாயகியாகவும் (அஞ்சு) ஊர்வசி அவரது மாமியாராகவும் (லீலாம்மா) நடித்தனர். பார்வதியின் அஞ்சுவின் கணவரான தாமஸ்குட்டி கதாபாத்திரத்தில் பிரசாந்த் முரளி நடித்துள்ளார். கிறிஸ்டோ டாமி இயக்கிய இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்