சில நொடிகளில் வாழ்க்கையைத் தவறவிட்டிருப்பேன் - படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து குறித்து விஷால் டுவீட்
|'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து குறித்து நடிகர் விஷால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
நடிகர் விஷால் தற்போது 'மார்க் ஆண்டனி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் அரங்கம் அமைத்து நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட அரங்கத்தில் ஏராளமான கலைஞர்கள் பங்கேற்ற சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அங்குள்ள சுவரை இடித்துக்கொண்டு வாகனம் ஒன்று கூட்டத்துக்குள் புகுந்து வருவதுபோன்ற காட்சி படமாக்கப்பட்டது.
அப்போது பின்பகுதியில் வெடி வெடிக்க புகை மண்டலத்துக்கு நடுவில் வித்தியாசமான வாகனம் ஒன்று கூட்டத்தை நோக்கி வேகமாக வந்தது. ஆனால் பாதியில் நிற்க வேண்டிய அந்த வாகனம் தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்ற கலைஞர்கள் மீது மோதுவதுபோல் வேகமாக வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்த தொழில்நுட்ப கலைஞர்கள், துணை நடிகர்கள், நடிகைகள் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த சுமார் 50-க்கும் மேற்ப்பட்ட ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். அந்த வாகனம் வேகமாக வந்து உள்ளே அமைக்கப்பட்டு இருந்த செட்டின் மீது மோதி நின்றது.
நல்லவேளையாக இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, எந்தவித உயிர் சேதமோ ஏற்படவில்லை. படப்பிடிப்பில் நடந்த இந்த திடீர் விபத்து குறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. படப்பிடிப்புக்காகவே பயன்படுத்தப்படும் அந்த வாகனத்தில் பிரேக் சரியாக பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், இந்த விபத்து குறித்து நடிகர் விஷால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சில நொடிகள் மற்றும் சில அங்குலங்களில் என் வாழ்க்கையைத் தவறவிட்டிருப்பேன், எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி, மீண்டும் படப்பிடிப்பில்" என்று குறிப்பிட்டுள்ளார்.