< Back
சினிமா செய்திகள்
விரைவில் நல்ல படத்துடன் உங்களை சந்திக்கிறேன் - இயக்குனர் பார்த்திபன்
சினிமா செய்திகள்

'விரைவில் நல்ல படத்துடன் உங்களை சந்திக்கிறேன்' - இயக்குனர் பார்த்திபன்

தினத்தந்தி
|
31 Oct 2023 1:57 PM IST

தற்போது புதிய படம் ஒன்றை இயக்கிவரும் பார்த்திபன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கிய 'ஒத்த செருப்பு' திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய 'இரவின் நிழல்' திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.

இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசை அமைக்கிறார். அதனை சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப்பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் பார்த்திபன் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'நான் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறேன். அந்த படத்தின் தலைப்பை விரைவில் அறிவிப்பேன். வெறும் ரசிகர்களுக்கான திரைப்படமாக இருந்தால் ஏதோ ஒரு படத்தை எடுத்துவிடலாம்; ஆனால், நான் எடுக்கும் திரைப்படம் ரசனை மிகுந்தவர்களுக்கான திரைப்படம்; முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடவும் குழந்தைகள் ரசிக்கவும் ஒரு படம் தயாராகிறது.

நானும் குதூகலமாக இருக்கிறேன் ஏனென்றால் அந்த படத்திற்கான டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன; என்னுடைய அறிவுக்கு எட்டிய அளவில் படத்தில் உள்ள தவறுகளை திருத்தி உங்கள் பார்வைக்கு எடுத்து வருவேன்; படத்தில் விஎப்எக்ஸ்(VFX) பணிகள் நிறைய உள்ளன; நாம் வழக்கமாக ஹாலிவுட் படங்களை மட்டுமே கொண்டாடுவோம், ஹாலிவுட் படங்களைபோல நம்மால் எடுக்கமுடியாது. ஆனால் நமக்கு இருக்கும் ஒரே கட்டுப்பாடு படத்தின் பட்ஜெட்தான்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், 'அவ்வளவு தொழிநுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலேயே அவ்வையார், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பிரமாண்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. நான் எடுக்கும் படம் பிரமாண்டமான படம் அல்ல, ஆனால் ரொம்ப நுணுக்கமான படம். நான் விரைவில் உங்களை நல்ல படத்துடன் சந்திக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்