காதல் திருமணம் செய்து கொள்வேன் - விஜய்தேவரகொண்டா
|தமிழில் நோட்டா படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் விஜய்தேவரகொண்டா. தெலுங்கில் நடித்த அர்ஜுன் ரெட்டி படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. தொடர்ந்து தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார்.
விஜய்தேவரகொண்டா, சமந்தா ஜோடியாக நடித்துள்ள குஷி படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் விஜய்தேவரகொண்டா சென்னையில் அளித்த பேட்டியில் கூறும்போது, " விஜய்யின் குஷி பட தலைப்பை எனது படத்துக்கு வைத்து இருப்பது மகிழ்ச்சி.
விஜய், விஜய்சேதுபதி ஆகியோருடன் இணைந்து நடிக்க ஆர்வம் உள்ளது. சமந்தா திறமையான நடிகை. நான் சமந்தாவின் தீவிர ரசிகன். அவருக்கு ஜோடியாக நடித்தது மகிழ்ச்சி. குஷி படம் தமிழ் ரசிகர்களுக்கு குஷியை உண்டாக்கும். சிரிக்க வைக்கும்.
நான் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். மனைவியாக வரப்போகிறவரிடம் பழகி குணநலன்களை அறிந்து கொள்வது முக்கியம். காதலில்தான் அது சாத்தியம்.
பெண்கள் மீது அதிகாரம் செலுத்தக்கூடாது. நான் பெண்களை மதிக்கிறேன். என்னை பெண்ணியவாதி என்று கேலி செய்வதால் வருத்தம் இல்லை. ரஜினிகாந்த், சிரஞ்சீவி போன்ற நடிகர்கள் சினிமாவின் சகாப்தமாக இருப்பவர்கள். அவர்கள் படங்களை வெற்றி- தோல்வி என்ற வட்டத்துக்குள் அடக்கக்கூடாது''என்றார்.