'கதைக்கு தேவைப்பட்டால் ஆபாசமில்லாத முத்த காட்சியில் நடிப்பேன்' - நடிகை மீனாட்சி சவுத்ரி
|சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான ’சிங்கப்பூர் சலூன்’ படத்தில் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.
சென்னை,
தமிழில் விஜய் ஆண்டனியின் 'கொலை' படம் மூலம் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி. சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான 'சிங்கப்பூர் சலூன்' படத்தில் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது. தற்போது விஜய்க்கு ஜோடியாக 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இவர், தற்போது கதைக்கு தேவைப்பட்டால் ஆபாசமில்லாத முத்த காட்சியில் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் கூறியதாவது, 'சினிமாவில் எனக்குள் சில கட்டுப்பாடுகளை வைத்துள்ளேன். கதை, கதாபாத்திரம் அசவுகரியமாக இருந்தால் நடிக்க மாட்டேன். இதன் காரணமாக ஏற்கனவே பல பெரிய பட வாய்ப்புகளை விட்டுவிட்டேன். முத்தக்காட்சிகளிலும் சில நிபந்தனைகள் உள்ளன.
கதைக்கு தேவையாக இருந்து, ஆபாசம் இல்லாமல் இருந்தால் முத்தக்காட்சியில் நடிப்பேன். தேவையில்லாமல் முத்தக்காட்சியில் நடிக்க கேட்டால் நிராகரித்து விடுவேன். தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசை உள்ளது. எனக்கு பணம் முக்கியம் இல்லை. எனது நடிப்பை எல்லோரும் பாராட்ட வேண்டும் என்பதே முக்கியம்.
சினிமாவில் பிசியாக இருக்க, கண்ட படங்களில் எல்லாம் நடிப்பது பிடிக்காது. சினிமாவில் எனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் பற்றி மட்டும்தான் யோசிப்பேன். நல்ல கதைகளில் நடித்தால்தான் எனது முழு திறமையை வெளிப்படுத்த முடியும்' இவ்வாறு அவர் கூறினார்.