நல்ல கதை அமைந்தால் மீண்டும் நடிப்பேன் - குஷ்பு
|ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு 1980 மற்றும் 90-களில் சினிமாவில் கலக்கியவர் குஷ்பு. திருமணத்துக்கு பிறகு குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்த அவர் சமீப காலமாக நடிக்கவில்லை.
தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறார்.
இதுகுறித்து குஷ்பு கூறும்போது. "சினிமா உலகம் இப்போது தொழில்நுட்ப ரீதியாக பரந்து விரிந்திருக்கிறது. என் காலத்தில் இருந்த சினிமா வேறு. நாங்களெல்லாம் ஆடிப்பாடிய அந்த காலமெல்லாம் முடிந்துவிட்டது. முன்பு வந்த படங்களில் ஹீரோயிசம், ஆக்ஷன் மட்டும் தான் இருக்கும். இப்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் நிறைய வருகின்றன. ஓ.டி.டி. தளங்களும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தாராளமாக வாரி வழங்குகின்றன. எதிர்மறை கதாபாத்திரங்களிலும் நடிகைகள் வெளுத்து வாங்கி வருகிறார்கள்.
நல்ல கதை அமைந்தால் மீண்டும் நடிப்பது பற்றி யோசிப்பேன். நான் எந்த படம் பண்ணினாலும், அந்த கதாபாத்திரத்தை யோசித்தே ஒப்புக்கொள்வேன். எதிர்மறை கதாபாத்திரங்களில் நான் நடிக்கவில்லை. ஒருவேளை அதுபோல கதாபாத்திரம் வந்தாலும், யோசித்து ஒப்புக்கொள்வேன்" என்றார்.