ஒரு வருடத்துக்கு பிறகு மீண்டும் நடிப்பேன் -அமீர்கான்
|ஒரு வருடத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வருவேன் என்று அமீர்கான் கூறியுள்ளார்.
இந்தியில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் அமீர்கான் நடிப்பில் வெளியான 'லால் சிங் சத்தா' படம் திரைக்கு வந்து படுதோல்வி அடைந்தது. ரூ.180 கோடி செலவில் தயாரான இந்த படம் ரூ.38 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்பட்டது. லால்சிங் சத்தா வெளியாகும் முன்பே அதை புறக்கணிக்கும்படி வலைத்தளத்தில் பலரும் வற்புறுத்தினர். படத்தின் தோல்வியால் அமீர்கான் அதிர்ச்சியானார். அவர் நடிக்க இருந்த புதிய படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க மறுத்தார். சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்தார். இந்த நிலையில் ஒரு வருடத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வருவேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அமீர்கான் அளித்துள்ள பேட்டியில், ''சினிமாவில் சில வருடங்களாக ஓய்வே இல்லாமல் நடித்தேன். அதனால்தான் இப்போது ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளேன். எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். நான் செய்ய வேண்டிய சில சொந்த வேலைகள் உள்ளன. ஒரு வருடத்துக்கு பிறகு மீண்டும் நடிப்பேன்" என்றார்.