'அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை ஆதரிக்கிறேன்' - இயக்குனர் வெற்றிமாறன்
|இந்தியா என்ற பெயரே போதுமானதாகவும், சரியானதாகவும் உள்ளது என்று இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை முழுமையாக ஆதரிப்பதாக இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"சமத்துவம் என்பது பிறப்புரிமை. அதில் எந்த கேள்வியும் இல்லை. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான் அடிப்படை. அதை மறுக்கின்ற எதுவாக இருந்தாலும் அதை வீழ்த்த வேண்டியது நமது கடமை.
இந்த உணர்வு உள்ள அனைவரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நிற்க வேண்டும் என்பது எனது விருப்பம். அவர் பேசியதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இந்தியா என்ற பெயரே எனக்கு போதுமானதாகவும், சரியானதாகவும் உள்ளது.
தேசிய விருதுகளை பொறுத்தவரை அதில் எனக்கு தனிப்பட்ட கருத்து உள்ளது. ஒரு படத்தை குறிப்பிட்ட விருதுக்காக அனுப்பும் போது, 'அந்த தேர்வுக்குழுவின் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன்' என்ற ஒப்புதலோடு தான் தேர்வுக்கு அனுப்புகிறோம். எனவே விருது கிடைப்பதும், கிடைக்காததும் அந்த தேர்வுக்குழுவின் முடிவு.
அதே போல், ஒரு தேர்வுக்குழுவின் முடிவு எந்த படத்தின் தரத்தையும், சமூக பங்களிப்பையும் தீர்மானிப்பதில்லை. குறிப்பாக 'ஜெய்பீம்' படம் வந்த பிறகு குறிப்பிட்ட சமூகத்தினரின் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த படத்தை தொடங்கியதற்கான நோக்கம் நிறைவேறிவிட்டது. விருது கிடைத்திருந்தால் அது அந்த படக்குழுவிற்கு கூடுதல் சிறப்பைக் கொடுத்திருக்கும். எனவே ஒரு படத்தின் தரத்தை தேர்வுக்குழுவின் முடிவு தீர்மானிக்க முடியாது என்பது எனது கருத்து."
இவ்வாறு வெற்றிமாறன் தெரிவித்தார்.