< Back
சினிமா செய்திகள்
நடிகைகளை தவறாக சித்தரிப்பதை கடுமையாக கண்டிக்கிறேன் - கவிஞர் வைரமுத்து
சினிமா செய்திகள்

'நடிகைகளை தவறாக சித்தரிப்பதை கடுமையாக கண்டிக்கிறேன்' - கவிஞர் வைரமுத்து

தினத்தந்தி
|
27 Nov 2023 10:22 AM IST

சினிமா நடிகைகளை தவறாக சித்தரிப்பதை கடுமையாக கண்டிப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சேலம்,

சேலம் சாரதா கல்லூரி சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் கவிஞர் செந்தமிழ் தேனீ எழுதிய "சேலத்திற்குப் பெருமை சேர்க்கும் பெருமைக்குரியவர்கள்" என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் டீப்-பேக் தொழில்நுட்பம் மூலம் நடிகைகளை தவறாக சித்தரிப்பது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வைரமுத்து, 'அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அது பெண்மைக்கு செய்யப்படும் இழிவு என்று நினைக்கிறேன். சொல்லப்போனால் கலையுலக சகோதரிகளுக்கு ஏற்படும் தலைகுனிவாக அதை கருதுகிறேன்.

எந்த ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்புக்கும் எதிர் விளைவுகள் உண்டு. ஒரு நன்மைக்குள்ளும் ஒரு தீமையை நமது தீய உள்ளம் கண்டறிகிறது. அதை கடந்து இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மனிதகுல வளர்ச்சிக்கு கொண்டு செல்வதுதான், நம்முடைய நாகரிகத்தின் வளர்ச்சி. செயற்கை நுண்ணறிவை நான் வரவேற்கிறேன். இந்த உலகம் செயற்கை நுண்ணறிவுக்கு முன், செயற்கை நுண்ணறிவுக்கு பின் என்று இரண்டாக பிளவுபட போகிறது' என்று தெரிவித்தார்.

மேலும் அவரிடம், லைக்குகளுக்காக சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பதிவிடுவது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், 'அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். விளம்பரமும் புகழும் நல்ல முயற்சிகளால் வரவேண்டும். அவை தீய செயல்களால் வர கூடாது. பிரபலமாவது வேறு புகழோடு இருப்பது வேறு. நல்ல செயல்களால் வருவது புகழ். தீய செயல்களால் வருவது விளம்பரம். எனவே விளம்பரம் வேண்டாம் புகழை தேடுங்கள்' என்று கூறினார்.

மேலும் செய்திகள்