எந்தவொரு உறவாக இருந்தாலும் அதில் நேர்மையும், உண்மையும் முக்கியம் - ஜெயா பச்சன்
|சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் ஜெயா பச்சன், தன் கணவர் அமிதாப் பச்சன் குறித்தும் தனது நெருங்கிய நண்பர்கள் குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
பாலிவுட் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனின் மனைவியும், பிரபல நடிகையுமான ஜெயா பச்சன் சமாஜ்வாடி கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினராக ஐந்தாவது முறையாக பொறுப்பு வகித்து அரசியலிலும் பங்காற்றி வருகிறார்.
சத்யஜித்ரேவின் 'மஹாநகர்' மூலம் அறிமுகமாகி, பாலிவுட்டில் பல படங்களில் நடித்து பிரபல கதாநாயகியாக வலம் வந்த ஜெயா பச்சன், 'பத்ம ஶ்ரீ' விருதையும் பெற்றவர். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் இவர், தன் கணவர் அமிதாப் பச்சன் குறித்தும் தனது நெருங்கிய நண்பர்கள் குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார்.
இதுபற்றி பேசிய ஜெயா பச்சன், " என் சிறந்த நண்பர் என் கணவர்தான். அவரிடம் நான் எதையும் மறைக்க மாட்டேன். எந்தவொரு உறவாக இருந்தாலும் அதில் நேர்மையும், உண்மையும் இருக்க வேண்டும். அதுதான் எல்லா உறவுகளுக்கும் அடிப்படையான ஒன்று. அதேபோல எந்தவொரு உறவிலும் உங்களின் கருத்தை தயக்கமின்றி சொல்வதற்கு இடமிருக்க வேண்டும். அப்போதுதான் அது மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். என் கணவர்தான் எனக்கு சிறந்த நண்பராக இருக்கிறார். இதைத்தாண்டி, இப்போதும் என்னுடைய நெருக்கமான நண்பர்கள் எல்லோரும் எனது கல்லூரி நண்பர்கள்தான். அவர்கள்தான் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்து வருகிறார்கள்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.