பாத்ரூமில் உட்கார்ந்து உணவு சாப்பிட்டேன்... பிரியங்கா சோப்ரா பகிர்ந்த பழைய நினைவுகள்
|தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு கதாநாயகனுக்கு இணையான சம்பளம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த கால பழைய நினைவுகள் குறித்து பிரியங்கா சோப்ரா அளித்துள்ள பேட்டியில், ''நான் பள்ளி படிப்புக்காக அமெரிக்காவுக்கு சென்ற புதிதில் எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொண்டேன். மிகவும் பயந்து கொண்டே நாட்களை கழித்தேன்.
உணவுப்பண்டங்கள் வாங்கிக் கொண்டு யாரும் பார்க்காமல் பாத்ரூமுக்குள் சென்று தின்றுவிட்டு கிளாஸ் ரூமுக்கு சென்று விடுவேன். அந்த நாட்களில் வேறு யாருடனும் நான் சேர்ந்து எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. எனக்கு இருந்த பயத்தினால்தான் அப்படி நடந்து கொண்டேன். அத்தனை பயங்களையும் ஒதுக்கி விட்டுத்தான் இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். சுமார் 4 வாரங்கள் அங்கு ஒவ்வொரு விஷயத்தையும் நிதானமாக கவனித்தேன். அதன் பிறகு எனக்குள் தைரியம் வந்தது. பள்ளியில் இருக்கும் இதர மாணவர்களோடு நட்புக்காக என்னை மாற்றிக் கொண்டேன். டேட்டிங் செல்வது, லேட்நைட் பார்ட்டிகள் இதெல்லாம் எங்கள் குடும்பத்தில் அனுமதிக்க மாட்டார்கள் என்று நண்பர்களுக்கு புரியும்படி கூறினேன்'' என்றார்.