சொத்தை அடமானம் வைத்து படம் எடுத்தேன் - கங்கனா ரணாவத்
|கங்கனா ரணாவத் ‘எமர்ஜென்சி' என்ற படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடித்து அவரே தயாரித்தும் இருக்கிறார். இந்த படத்துக்காக தனது அனைத்து சொத்துகளை அடமானம் வைத்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து கங்கனா ரணாவத் கூறும்போது, "எமர்ஜென்சி படப்பிடிப்பை முடித்து விட்டேன். எனது வாழ்க்கையின் பெருமையான தருணம் இது. ஆனாலும் படத்தை சுகமாக முடித்து விடவில்லை.
படப்பிடிப்பை ஆரம்பித்தபோது எனக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பிறகு படத்தை முடிக்க எனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்தேன். இது எனக்கு மறுபிறவி மாதிரி.
சொத்தை அடமானம் வைத்ததை வெளியே சொல்லவில்லை. முன்பே சொல்லி இருந்தால் சிலர் எனது நிலையை பார்த்து கவலைப்பட்டு இருப்பார்கள். ஆனால் நான் விழுவதை பார்க்க ஆசைப்படுபவர்களுக்கும், நான் கஷ்டப்பட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் எனது வலி மூலம் கிடைக்கும் சந்தோஷத்தை கொடுக்க நான் விரும்பவில்லை.
நான் சொல்ல விரும்புவது உங்கள் கனவுகள் நிறைவேற கடினமாக உழையுங்கள். நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை என்மீது அக்கறை கொண்டவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.