அரசியல்வாதிகளால் ரூ.40 கோடி இழந்தேன் - நடிகை கங்கனா ரணாவத்
|தமிழில் தாம்தூம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான கங்கனா ரணாவத் தலைவி படத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.
கங்கனா ரணாவத் அரசியல், சமூக கருத்துக்களை துணிச்சலாக வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். மராட்டிய அரசும் கங்கனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. அவரது அலுவலகத்தையும் விதிமீறி கட்டியதாக இடித்தனர்.
இந்த நிலையில் கங்கனா ரணாவத் அளித்துள்ள பேட்டியில், "அரசியல், சினிமா, சமூகப் பிரச்சினை எதுவாக இருந்தாலும் உடனே நான் கண்டனம் தெரிவிக்கிறேன். வெளிப்படையாக பேசுகிறேன். இதன் காரணமாக சில அரசியல் தலைவர்கள் நான் விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு இல்லாமல் செய்து விட்டார்கள்.
அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்ததாலும் நாட்டிற்கு எதிரான சக்திகளை எதிர்த்து குரல் கொடுத்ததாலும் சுமார் 30 விளம்பரங்களில் நடிக்க நான் ஒப்பந்தமாகி இருந்த நிலையிலும் இரவோடு இரவாக அவற்றை ரத்து செய்துவிட்டனர். இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு ரூ.30 முதல் ரூ.40 கோடி வருவாய் இழந்துவிட்டேன். ஆனாலும் இப்போது சுதந்திரமாக இருக்கிறேன். நான் சொல்ல நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது'' என்றார்.