"என் பையன் பட்ட கஷ்டம் எனக்கு தெரியும்.." கார்த்திக் சுப்புராஜ் அப்பா பேட்டி
|என் பையன் பட்ட கஷ்டம் எனக்கு தெரியும் என்று கார்த்திக் சுப்புராஜ் அப்பா கஜராஜ் கூறினார்.
சென்னை,
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அப்பா கஜராஜ். இவர் மீசைய முறுக்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தமன்குமார் நடிப்பில் உருவாகி உள்ள 'ஒரு நொடி' படத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் இவர் கொடுத்த பேட்டியில் சிறிய படங்கள் குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது,
சிறிய படங்கள் வந்தால்தான் சினிமாதுறை நல்லா இருக்கும். ஒரு பெரிய படம் வருகிறது என்றால் அதில் 200 பேர் வேலை செய்வார்கள். ஆனால் ஒரு நாளில் 100 சிறிய படங்கள் நடக்கின்றன. ஒரு படத்திற்கு 50 பேர் என்றால்கூட 5,000 பேர் வேலை செய்கிறார்கள். மேலும், இவர்கள் 30 நாட்களில் படத்தை முடித்துவிடுகிறார்கள்.
இப்படி இருப்பதால் சினிமா துறையில் வேலை வாய்ப்புகள் அதிகமாகும். சிறிய படங்கள் என்றாலே அனைவரும் யோசிக்கிறார்கள். அது மாற வேண்டும்.
நல்ல கதைகளம் உள்ள சிறிய படங்களுக்கு ஆதரவு கொடுங்கள். என் பையன் பட்ட கஷ்டம் எனக்கு தெரியும். அவனும் சிறிய படங்களை எடுத்துத்தான் வந்திருக்கிறான். இவ்வாறு பேசினார்
கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இது சூர்யாவின் 44-வது படமாகும். அதன்படி தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 17-ம் தேதி துவங்கவுள்ளது.