இந்திப்பட மாபியா கும்பல் பற்றி பேச எனக்கு இப்போதுதான் தைரியம் வந்தது - நடிகை பிரியங்கா சோப்ரா
|தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்துள்ள பிரியங்கா சோப்ரா, இந்தியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு படவாய்ப்புகள் குறைய ஹாலிவுட்டுக்கு சென்றார். சமீபத்தில் பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டியில், "இந்தி சினிமா மாபியாக்கள் கையில் உள்ளது என்றும், அவர்கள் என்னை ஓரம் கட்டினர் என்றும், அந்த அரசியலை தாக்குப்பிடிக்க முடியாமல் ஹாலிவுட்டுக்கு சென்றுவிட்டேன்'' என்றும் தெரிவித்த கருத்து பரபரப்பானது.
பிரியங்கா சோப்ராவுக்கு கங்கனா ரணாவத் உள்ளிட்ட பல நடிகைகள் ஆதரவு தெரிவித்தனர். இத்தனை நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது எதற்காக பிரியங்கா சோப்ரா இவ்வாறு பேசினார் என்று சிலர் சந்தேகங்களும் கிளப்பினர்.
இதற்கு விளக்கம் அளித்து பிரியங்கா சோப்ரா கூறும்போது, "சமீபத்திய நிகழ்ச்சியில் எனது சினிமா வாழ்க்கை பயணம் பற்றி கேட்டனர். இதனால் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் வெளிப்படையாக தெரிவித்தேன். இந்தி பட உலக மாபியா கும்பல் பற்றிய உண்மையை சொன்னேன்.
என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட அந்த வலிகளை பற்றி பேச எனக்கு இப்போதுதான் தைரியம் வந்துள்ளது. நான் அனுபவித்த சங்கடங்களை தைரியமாக உலகுக்கு சொல்லும் நிலையில் நான் இன்று இருக்கிறேன்'' என்றார்.