வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டேன் - ஐஸ்வர்யா ராஜேஷ்
|பெயரில் இருக்கும் ஐஸ்வர்யம் வாழ்க்கையில் இல்லை. பெரிய கதாநாயகி என்ற பெயர் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. நல்ல நடிகை என்ற பெயர் கிடைத்தால் போதும் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
சினிமாவில் நடிக்க வந்த புதிதில் சிறிய கதாபாத்திரங்களில் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்துக்கு பிறகு கவனிக்கப்பட்டார். கனா படம் திருப்புமுனையாக அமைந்தது. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது 6 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்துள்ள பேட்டியில், ''என் பெயரில் இருக்கும் ஐஸ்வர்யம் வாழ்க்கையில் இல்லை. சிறு வயதிலிருந்தே நிறைய கஷ்டங்களை அனுபவித்தேன். எனக்கு எட்டு வயது இருக்கும்போது அப்பாவின் அன்பை இழந்தேன். ஒரு சாலை விபத்தில் இரண்டு அண்ணன்களும் மரணம் அடைந்தனர். வாழ்க்கை எனக்கு புதிது புதிதாக பாடங்கள் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறது. சினிமாவிற்கு வந்த புதிதிலும் அதற்கு முன்பும் நிறைய அடி மீது அடி வாங்கினேன். அதனால்தானோ என்னவோ இப்போது என்னை தோல்வி அவ்வளவாக பாதிப்பதில்லை. பெரிய கதாநாயகி என்ற பெயர் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. நல்ல நடிகை என்ற பெயர் கிடைத்தால் போதும். நான் நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கும் படியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்றார்.