'இனி எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை'- பாலிவுட் நடிகை வருத்தம்
|சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராணி முகர்ஜி மனம் திறந்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார்.
மும்பை,
பாலிவுட் முன்னணி நடிகையான ராணி முகர்ஜி, தமிழில் 'ஹே ராம்' படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்திருந்தார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து கவனம் ஈர்த்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராணி முகர்ஜி மனம் திறந்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார். அப்போது அவர் கூறும்போது, ''இனி என்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. கடந்த 7 ஆண்டுகளாக நான் இரண்டாவது குழந்தைக்காக முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். ஆனால் இப்பொழுது வரை சாத்தியமாகவில்லை.
என் முதல் குழந்தைக்கு ஒரு தங்கையையோ, தம்பியையோ என்னால் கொடுக்க முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. கொரோனா ஊரடங்கு சமயத்தில் எனது வயிற்றில் இருந்த குழந்தையை எதிர்பாராதவிதமாக இழந்துவிட்டேன்.
எனக்கு வயது 46 ஆகிறது. இனி எனக்கு மீண்டும் குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை. என் மகள் அதிராவுக்கு இப்பொழுது 8 வயது ஆகிறது. அவள் விளையாடி மகிழ ஒரு துணையை கொடுக்க முடியாத வேதனை என்னை வாழ்நாள் முழுவதும் துன்புறுத்தும். ஆனாலும் நமக்கு கிடைத்ததை வைத்து நாம் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன்'' என்று ராணி முகர்ஜி கூறினார்.