கடவுள் இல்லாமல்கூட 50 ஆண்டுகள் இருந்திருக்கேன்.. மனிதர்கள் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது - கமல்
|'இனிமேல்' பாடலில் மனங்களின் உணர்வு பற்றிய கேள்விக்கு கமல்ஹாசன், கடவுள் இல்லாமல்கூட 50 ஆண்டுகள் இருந்துள்ளதாகவும் ஆனால் மனிதர்கள் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
சென்னை,
நடிகர் கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுதி தயாரித்த 'இனிமேல்' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. சுருதிஹாசன் இசையமைத்து பாடியிருந்த இந்தப் பாடலில் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து அவரே நடித்திருந்தார். மனித உணர்வுகளை மையப்படுத்தி இந்தப் பாடல் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கமல்ஹாசன் மற்றும் சுருதிஹாசன் இணைந்து தற்போது பரஸ்பரம் உரையாடலை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வீடியோவில் இருவரும் பல விஷயங்களை பேசியுள்ளனர். இனிமேல் பாடலுக்கு உணர்வுபூர்வமாக கமல்ஹாசன் எழுதியிருந்த பாடல் வரிகள் குறித்தும், தந்தை மகள் அன்பு குறித்தும் பல விஷயங்களை பேசியுள்ளனர். இந்த உரையாடல் நிகழ்ச்சியை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. 'இனிமேல்' பாடலை அவர்கள் இருவரும் பாடுவதுடன் இந்த வீடியோ துவங்கியுள்ளது.
சினிமாவில் பன்முகம் காட்டி வரும் சுருதிஹாசன் சமீபத்தில் 'இனிமேல்' என்ற இசைப்பாடலை வெளியிட்டிருந்தார். இதில் அவருடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார். மனித உணர்வுகளை வெளிப்படுத்தும்வகையில் அமைந்திருந்த இந்தப் பாடல் பரவலாக வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் பாடலுக்கான வரிகளை எழுதியதுடன், பாடலை தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிக்கவும் செய்திருந்தார் கமல்ஹாசன். இந்நிலையில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து பேசியுள்ள உரையாடல் வீடியோவை தற்போது ராஜ்கமல் இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் பல விஷயங்களை பேசியுள்ள கமல்ஹாசன் மற்றும் சுருதிஹாசன், ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி கேள்விகளை கேட்டுக் கொண்டதையும் பார்க்க முடிந்தது. நீண்ட நாட்களாக தான் கேட்க நினைத்த பல கேள்விகளை இதன்மூலம் தான் கேட்டுக் கொண்டதாக சுருதி, வீடியோவின் இடையில் பேசியதை பார்க்க முடிந்தது. இருவரும் இணைந்து உருவாக்கிய இனிமேல் இந்த தொல்லை இல்லை என்ற பாடலை பாடியபடி இந்த உரையாடலை அவர்கள் துவங்கியுள்ளனர். இந்த வீடியோ அனைவரையும் கவர்ந்த நிலையிலும், அதிகமான ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
'இனிமேல்' பாடலுக்கான வரிகளை, இரு மனங்களின் உணர்வுகளை எப்படி அவர் வார்த்தைகளாக கொண்டு வந்தார் என்று சுருதி கேள்வி எழுப்ப, இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், தான் கடவுள் இல்லாமல்கூட 50 ஆண்டுகள் இருந்துள்ளதாகவும் ஆனால் மனிதர்கள் இல்லாமல் 5 மணிநேரங்கள்கூட தன்னால் இருக்க முடியாது என்றும் அதனால் மனித மனங்களை அதன் உணர்வுகளைதான் சிறப்பாக கடத்த முடியும் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், தன்னால் மனிதர்கள் இல்லாமல் இருக்க முடியும் என்று பதிலளித்ததை பார்க்க முடிந்தது.