சண்டைக்கு பின்னர் 6 ஆண்டுகளாக இசை கற்று வருகிறேன் - மிஷ்கின்
|'டெவில்' படத்திற்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார்.
சென்னை,
'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே', 'யுத்தம் செய்', 'முகமூடி', 'துப்பறிவாளன்', 'சைக்கோ' போன்ற படங்களை இயக்கியவர் மிஷ்கின். 'சவரக்கத்தி' படத்தின் இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் 'டெவில்' என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார்.
மாருதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ். இளையராஜா படத்தொகுப்பையும் மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர். இந்த படத்தின் மூலம் இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்த படதின் நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், 'வாழ்க்கையில் அதிகமாக கஷ்டப்பட்ட நபர்களால் மட்டுமே சினிமாவை நேசித்து காதலிக்க முடியும். கஷ்டங்களை அனுபவிக்காமல் வளரும் ஒருவரால் சினிமாவிற்கு உண்மையாக இருக்க முடியாது.
அதனால் தாய்-தந்தையர் இல்லாத, வாழ்க்கையில் கொடுமையான சோகங்களை அனுபவித்த இளைஞர்களை நான் உதவி இயக்குனர்களாக சேர்த்துக் கொள்ள விரும்புவேன்.ஒரு படத்தில் கேளிக்கைகள், சுவாரசியமான விஷயங்கள் இருக்கலாம். ஆனாலும் அதை மீறி நெஞ்சைத் தைப்பது போல் ஒரு விஷயம் இருக்க வேண்டும். அதுதான் நல்ல திரைப்படத்திற்கான உயிர் ஆகும்.
நடிக்கும்போது சுயத்தை இழப்பவர்கள் தான் சிறந்த நடிகர்-நடிகைகளாக இருக்கமுடியும். இசையில் 100 மதிப்பெண் வாங்குபவர்கள் எப்போதும் இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும்தான். நான் இளையராஜாவிடம் இருந்து சண்டை போட்டு வந்ததற்குப் பின்னர் 6 ஆண்டுகளாக இசையை கற்று வருகிறேன். தற்போது 'டெவில்' என்ற படத்துக்கு இசையமைக்கிறேன். என் இசைக்கு 35 மதிப்பெண் கொடுக்கலாம் என்று நம்புகிறேன், என்று கூறினார்.