`எனக்கு நல்ல படங்கள் அமைந்தன' -நடிகை அனுஷ்கா
|தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அனுஷ்கா.
அனுஷ்கா சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது `மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பொலி ஷெட்டி' படம் மூலம் இளம் கதாநாயகன் நவீன் பொலி ஷெட்டிக்கு ஜோடியாக மீண்டும் திரையில் பிரவேசித்துள்ளார். இந்தப் படம் நல்ல வசூல் பார்த்து வருகிறது. இந்த நிலையில் சினிமா மற்றும் சொந்த வாழ்க்கை அனுபவங்களை அனுஷ்கா பகிர்ந்துள்ளார். அதன் விவரம்:-
*சினிமாவில் ஏன் இவ்வளவு இடைவெளி?
இந்த அளவு இடைவெளியை எதிர்பார்க்கவில்லை. இப்போது மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
*மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பொலி ஷெட்டி பட அனுபவம்?
தியேட்டரில் எனது படம் வெளியாகி 5½ ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நேரடியான படத்தில் புதுமையான கதை அம்சத்துடன் ரசிகர்கள் முன்னால் வந்து இருப்பது சந்தோஷத்தை அளித்துள்ளது.
*இத்தனை ஆண்டு பயணம் எப்படி உள்ளது?
ஹார்டு ஒர்க் செய்ய வேண்டும் என்று இருந்தாலும் நல்ல படங்கள் அமைய வேண்டும். அது எனக்கு கிடைத்தது. என்னை நம்பி அருந்ததியாக நடிக்க வைத்தனர். அதில் திறமையை காட்ட வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு ஏறுமுகமாகவே சினிமா வாழ்க்கை சென்றது.
*சமீப காலமாக நிறைய கோவில்களுக்கு செல்கிறீர்களே?…
இப்பொழுது மட்டுமல்ல என் சிறு வயது முதலே எங்கள் குடும்பத்தில் கோவிலுக்கு செல்வது என்பது ஒரு அங்கம்.ஒவ்வொரு திங்கட்கிழமையும், வெள்ளிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் செய்வோம். ஆனால் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் கோவிலுக்கு செல்ல எனக்கு நேரம் அமையவில்லை. சமீபத்தில் நீண்ட இடைவெளி கிடைத்ததால் கோவிலுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது, அவ்வளவுதான்.
*திருமணமாக வேண்டி பூஜைகள் செய்ததாக பேசினார்களே...?
இப்போது மட்டுமல்ல நான் கோவிலுக்கு சென்ற ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு சர்ச்சை நடந்து கொண்டு தான் இருக்கிறது.
*சரி இப்போதாவது சொல்லுங்கள் திருமணம் எப்போது?
திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இப்போது இல்லை.
*உங்கள் சக நடிகர் பிரபாஸ் பான் இந்தியா நடிகராக உயர்ந்துள்ளாரே?
பிரபாஸ் எனக்கு 2005-ம் ஆண்டு முதல் தெரியும். அப்போது அவர் எப்படி இருந்தாரோ, இப்போது பெரிய புகழும் பெயரும் கிடைத்த பிறகும் கூட அப்படியேதான் இருக்கிறார். எந்த மாற்றமும் இல்லை. அவர் எனக்கு நெருக்கமான நண்பர். அது வாழ்நாள் முழுவதும் அப்படியே தொடரும். நமக்கு நெருக்கமாக இருப்பவர்கள் வளர்ச்சி அடையும் பொழுது பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கும்.