'எனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் வந்தது' - அதிர்ச்சி தகவலை பகிர்ந்த ஏ.ஆர்.ரகுமான்
|சமீபத்தில் ஆக்ஸ்போர்டு யூனியன் பல்கலைகழக மாணவர்களிடம் நிகழ்ச்சி ஒன்றில் ஏ.ஆர்.ரகுமான் உரையாடினார்.
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான் இசைப்புயல் என மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். "ரோஜா" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகனாக வலம் வருகிறார்.
இவர் தற்போது தமிழில் லால் சலாம், தக் லைப் போன்ற படங்களுக்கும் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் புதிய படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இவரின் பாடல்கள் இந்தியாவைத் தாண்டி உலகளவிலும் பலரால் ரசிக்கப்படுகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் ஆக்ஸ்போர்டு யூனியன் பல்கலைகழக மாணவர்களிடம் நிகழ்ச்சி ஒன்றில் ஏ.ஆர்.ரகுமான் உரையாடினார். அப்போது அவர் தனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருந்ததாக அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.
அவர் அந்த நிகழ்ச்சியில் பேசியதாவது, 'சிறு வயதில் எனக்கு தற்கொலை எண்ணம் வந்தபோது, என் அம்மா என்னிடம், 'பிறருக்காக நீ வாழும்போது இதுபோன்ற எண்ணங்களெல்லாம் தோன்றாது' என்றார். அதுதான் அவர் எனக்கு சொன்ன அற்புதமான அறிவுரை.
நீங்கள் மற்றவர்களுக்காக வாழும்போது, சுயநலமாக இல்லாமல் இருந்தால் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருப்பதை உணர்வீர்கள். இசையமைக்கும்போது, எழுதும்போது, உணவு இல்லாதவர்களுக்கு உணவளிக்கும்போது நான் இதை நினைத்துக் கொள்வேன். அதுதான் என்னை பயணிக்க வைக்கிறது.
எதிர்காலத்தை பற்றிய குறைந்த அறிவே நமக்கு உள்ளது. எதிர்காலத்தை நாம் பெரிதாக கணிக்க முடியாது. உங்களுக்காக அற்புதமான பெரிய விஷயம் ஒன்று காத்திருக்கிறது' என்றார். இவரின் இந்த அறிவுரை குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.