10-ம் வகுப்பு படிக்கும்போதே சினிமாவில் நுழைந்து விட்டேன் - கயல் ஆனந்தி
|தான் நடித்த படங்களை பார்க்கும்போது சந்தோஷமாக இருப்பதாக நடிகை கயல் ஆனந்தி கூறியுள்ளார்.
சென்னை,
கயல் ஆனந்தி 'மங்கை' என்ற படத்தில் நாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் ஜெயப்பிரகாஷின் மகன் துஷி, ஷிவின், ராம்ஸ் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். குபேந்திரன் காமாட்சி இயக்கியுள்ளார்.
பட நிகழ்ச்சியில் கயல் ஆனந்தி சினிமா அனுபவங்களை பகிர்ந்தார். அவர் பேசும்போது, "நான் நடித்த 'கயல்' படம் வெளியாகி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது மங்கை படத்தில் நடித்து இருக்கிறேன். இது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.
நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோதே சினிமாவில் நடிக்க வந்து விட்டேன். அப்போது சினிமாவை பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்தேன். ஆனாலும் சினிமாவில் எதை கற்றுக்கொள்ள வேண்டுமோ அதில் கவனம் செலுத்தி கற்றுக்கொண்டு வருகிறேன்.
நான் நடித்த படங்களை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. மங்கை படம் மூலம் இன்னும் ஒருபடி முன்னேறி இருக்கிறேன். படம் எல்லோருக்கும் பிடிக்கும். நல்ல படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தருகிறார்கள். இந்த படத்துக்கும் ஆதரவு தாருங்கள். தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் படத்தை மக்களிடம் சேர்க்க கடுமையாக உழைக்கிறார்'' என்றார்.