ரசிகர்களை சந்திக்கும்போது செருப்பு அணிய மாட்டேன் - நடிகர் அமிதாப்பச்சன்
|ரசிகர்களை சந்திக்கும்போது செருப்பு அணிய மாட்டேன் என நடிகர் அமிதாப்பச்சன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் 80 வயதிலும் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்புகளில் சுறுசுறுப்பாக பங்கேற்று வருகிறார். மும்பையில் தான் மிகவும் விரும்பி கட்டிக் கொண்ட அழகிய ஜல்சா வீட்டில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர் தனது ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார். கொரோனா சமயத்தில் மட்டும் சந்திக்கவில்லை. கொரோனா குறைந்த பிறகு மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். அவர்களோடு சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார். ஒரு புகைப்படத்தில் அமிதாப்பச்சன் செருப்பு அணியாமல் இருந்தார். இதன் பின்னணியில் இருக்கும் காரணத்தை பற்றி அமிதாப்பிடம் கேட்டபோது, 'நான் எப்போதும் ஜல்சா வீட்டில் ரசிகர்களை சந்திக்கும்போது செருப்பை கழட்டி விடுவேன். ஏனென்றால் எனக்கு ரசிகர்கள் என்றால் மிகவும் பக்தி. அவர்களை சந்திப்பதை ஒரு ஆன்மிக நிகழ்ச்சிபோல நான் நினைக்கிறேன். என்னை வாழவைக்கும் தெய்வங்களாகவே அவர்களை பாவிக்கிறேன். அவர்கள் இல்லாவிட்டால் நான் இல்லை. 80 வயதிலும் கூட என்னை ரசிக்கும் ரசிகர்களுக்கு நான் செய்யும் சிறிய மரியாதை இது' என்றார்.