'நான் மேக்கப் போட மாட்டேன்' - நடிகை சாய் பல்லவி
|நடிகைகள் மேக்கப் போடுவது திரையில் அவர்களை இன்னும் அழகாக காட்டும். மேக்கப் இல்லாமல் கேமரா முன்னால் வருவதற்கு நிறைய நடிகைகள் தயங்குவார்கள். ஆனால் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ள சாய் பல்லவி படங்களில் மேக்கப் போடாமலேயே நடித்து வருகிறார்.
டைரக்டர்கள் மேக்கப் போடும்படி சொன்னாலும் மறுத்து விடுகிறார். மேக்கப் போடாத காரணங்களை சாய் பல்லவி பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில், "எனது முதல் படமான பிரேமம் படத்தில் இருந்து இன்றுவரை நான் ஒரு படத்தில் கூட மேக்கப் போட்டது இல்லை. பள்ளி நாட்களில் எனக்குள் தாழ்வு மனப்பான்மை அதிகம் இருந்தது. முகத்தில் இருக்கும் முகப்பருக்களை பார்த்து வேதனைப்படுவேன். என் குரல் கூட நன்றாக இருக்காது என்று நினைத்தேன்.
பிரேமம் படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்ததை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்களோ என்று முதலில் பயந்தேன். ஆனால் மேக்கப் இல்லாமல் கூட மிகவும் அழகாக இருக்கிறாய் என்ற பாராட்டு எனக்கு கிடைத்தது. அந்த பாராட்டுதான் எனக்குள் மிகப்பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. அது முதல் மேக்கப் இல்லாமல் நடித்து வருகிறேன்'' என்றார்.