< Back
சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் அப்படி பேசியது எனக்கு பிடிக்கவில்லை - இயக்குனர் பா.ரஞ்சித் விமர்சனம்
சினிமா செய்திகள்

'ரஜினிகாந்த் அப்படி பேசியது எனக்கு பிடிக்கவில்லை' - இயக்குனர் பா.ரஞ்சித் விமர்சனம்

தினத்தந்தி
|
22 Jan 2024 9:34 PM IST

பா.ரஞ்சித் இயக்கியுள்ள 'ப்ளூ ஸ்டார்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

சென்னை,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. அயோத்தி ராமர் கோவில் கருவறை பால ராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.

இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக இதில் பங்கேற்பதற்காக நேற்று நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி புறப்பட்டு சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், '500 ஆண்டுகால பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது' என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள 'ப்ளூ ஸ்டார்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பா. ரஞ்சித், அசோக் செல்வன், ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் எனப் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசினார். அவர், 'இன்று முக்கியமான நாள், வீட்டில் சென்று கற்பூரம் ஏற்றவில்லை என்றால் நாம் தீவிரவாதி ஆகிவிடுவோம். தீவிரமான காலக்கட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது' என்று தெரிவித்தார்.

மேலும் அவர், இன்று ராமர் கோவில் திறப்பை ஒட்டி அதன் பின்னால் நடக்கும் மத அரசியலை நாம் கவனிக்க வேண்டும். மக்கள் மனதில் வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் பிற்போக்குத் தனத்தை இந்த கலை சரி செய்யும் என்று நாம் நம்புகிறோம். அந்த நம்பிக்கையோடுதான் இந்த கலையை நாம் கையாள்கிறோம்' என்று தெரிவித்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 'ரஜினிகாந்த் ராமர் கோவில் விழாவிற்கு செல்வது அவரது விருப்பம். இது தொடர்பான கருத்துகளை அவர் முன்பே கூறியிருக்கிறார். ஆனால் அவர் 500 ஆண்டு பிரச்னை தீர்த்துவிட்டதாக கூறியுள்ளார். இது எனக்கு பிடிக்கவில்லை இதற்கு பின்னால் இருக்கும் அரசியலை நாம் கேள்வி கேட்க வேண்டியுள்ளது. அவர் பேசியது சரி, தவறு என்பதை தாண்டி அதில் எனக்கு விமர்சனம் உள்ளது' என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்