< Back
சினிமா செய்திகள்
என்னோட கோபத்தை இன்னும் முழுசா காட்டல... இயக்குனர் மாரி செல்வராஜ் பரபரப்பு பேச்சு
சினிமா செய்திகள்

என்னோட கோபத்தை இன்னும் முழுசா காட்டல... இயக்குனர் மாரி செல்வராஜ் பரபரப்பு பேச்சு

தினத்தந்தி
|
29 Feb 2024 2:53 PM IST

என்னுடைய கோபம் அளவிட முடியாதது; அதை திரைக்கதை வடிவமாக மாற்றவே முடியாது என்று இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், எழுச்சி தமிழர் இலக்கிய விருதுகள் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறந்த திரைப்பட பிரிவில் 'மாமன்னன்' படத்திற்காக மாரி செல்வராஜுக்கு விருது வழங்கப்பட்டது. பின்னர் விழாவில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியதாவது:-

'பரியேறும் பெருமாள்' திரைப்படத்திற்காக எனக்கு முதல் விருது கிடைத்தது. பாராதிராஜா சார் அந்த விருதை கொடுத்தார். விருதை வாங்கிவிட்டு திரும்பும் போது, எங்க அப்பா மாதிரி திருமா அண்ணன் உட்கார்ந்திருந்தார். தானாக என் கால் அவரிடம் சென்றது. விருதை அவர் கையில் கொடுத்தேன். அதை வாங்கிய அவர், என்னை அணைத்துக் கொண்டார். அது தான் என் வாழ்க்கையினுடைய மிகச்சிறந்த தருணம்.

நான் ரொம்ப எமோஷனலான நபர். ஒரு திரைக்கதை எழுதும்போது எந்தெந்த காட்சிகளில் ஆத்திரப்படுகிறேன், எதில் உணர்ச்சிவசப்படுகிறேன் என்று எனக்கே தெரியும். இதை எப்படி படமாக்குவது என்ற கேள்வி எனக்குள் எழும். எல்லா இயக்குனர்களும் எல்லா திரைக்கதை ஆசிரியர்களும் தன் மனம் போன போக்கில், எழுதக் கூடிய ஒரு கலைவடிவமான திரைக்கதையை நான் ஒரு நாளும் என் மனம் போன போக்கில் எழுதியதே கிடையாது. அப்படி எழுதுவதற்கான சாத்தியக் கூறுகள், தமிழ் சினிமாவிலோ அல்லது நம் சமூகத்திலோ இல்லை. அண்ணன் சொல்வது போல், எதிரிகளை ஜனநாயகப்படுத்த வேண்டும். அதை மனதில் வைத்து தான் ஒவ்வொரு திரைக்கதையையும் உருவாக்குகிறேன்.

'மாமன்னன்' படத்தில் இடைவேளையாகட்டும், 'பரியேறும் பெருமாள்' படத்தில் அப்பா ஓடி வருகிற காட்சியாகட்டும், 'கர்ணன்' படத்தில் பஸ் உடைக்கப்பட்டு அப்பா, அந்த பையனை வெளியே கூட்டிக்கொண்டு போகும் காட்சியாகட்டும், இப்படி எல்லா காட்சிகளையும் படமாக்குவதற்கு முன்பு, இந்த காட்சியை நம்மால் வெளியே கொண்டு வர முடியுமா, சென்சார் போர்டு அனுமதிக்குமா, இந்த காட்சி வெளியே வந்தால் நம்மை எப்படி பார்ப்பார்கள், என்ன மாதிரியான விமர்சனங்கள் நம் மேல் வரும் என்ற கேள்விகள் எழும்.

அப்போதெல்லாம் நான் அண்ணன் திருமாவுடைய வீடியோக்களை பார்ப்பேன். அவருடைய பேச்சுகளில் என்னிடம் இருப்பதை விட அதிக ஆத்திரம், ஆவேசம் இருக்கும். பாய்ச்சலும் அதிகமாக இருக்கும். ஆனால் அதே நேரத்தில் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட வேண்டிய நிதானம் அதில் முக்கியமாக இருக்கும். ஜனநாயகத்தை மையப்படுத்தி தான் அந்த பேச்சு இருக்கும். ஒன்றரை மணி நேரம் பேசுவார். ஆக்ரோஷமா இருக்கும். ஆனால் அதில் ஒரு நூலிழையில் கூட நிதானம் தவறிய பேச்சு இருக்காது. அந்த நிதானத்தை கற்றுக்கொள்ள நான் முயன்று கொண்டிருக்கிறேன்.

என்னுடைய படங்களில் என் கோபத்தை இன்னும் நான் காட்டவே இல்லை. என்னுடைய கோபம் அளவிட முடியாதது. அதை திரைக்கதை வடிவமாக மாற்றவே முடியாது. அதை சென்சார் போர்டு அனுமதிக்காது. சென்சார் போர்டு நிஜத்தையே அனுமதிக்க மாட்டேன் என்கிறது. கோபத்தை எப்படி அனுமதிக்கும். திரைக்கதை வடிவம் என்பது ஜனநாயகமான விஷயம். நான் இதுவரை பதிவு பண்ணினது எல்லாமே என்னிடம் இருந்த நிஜம். அதை கோபமா மாத்தினேன் என்றால் அதனுடைய வீச்சு வேறொன்றாக இருக்கும். ஆனால் அதைவிட அவசியம் வருகிற தலைமுறைகளுக்கு, நாம் நிஜத்தை சொல்லுவதன் மூலமாக அவர்களை ஒட்டுமொத்தமாக தயார்படுத்துவது. அதைப் புரிந்து கொள்ள வைத்தது திருமா அண்ணனுடைய பேச்சுகள் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்