ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்; கேன்ஸ் திரைப்பட விழாவில் பாரம்பரிய வேட்டி, சட்டையுடன் தோன்றிய மத்திய மந்திரி முருகன்
|கேன்ஸ் திரைப்பட விழாவில் பாரம்பரிய வேட்டி, சட்டையுடன் தோன்றிய மத்திய மந்திரி எல். முருகன் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
பாரீஸ்,
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரான்சில் 76வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா மே 16-ந்தேதி தொடங்கியது. வருகிற 27-ந்தேதி வரை 12 நாட்கள் விழா கோலாகலமுடன் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில், இந்தியா சார்பில் நடிகைகள் சாரா அலி கான், மனுஷி சில்லார், ஈஷா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொள்ளும் திரை நட்சத்திரங்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் மேற்கத்திய பாணியிலான உடைகளை அணிவது வழக்கம்.
எனினும், நமது பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையை அணிந்தபடி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை மந்திரி முருகன் சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்றார். ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன் என அவர் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இன்று நடைபெற்ற சிவப்பு கம்பள வரவேற்பில் தமிழ் பாரம்பரிய அடையாளமான வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்.
ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்றுள்ள இந்த தருணத்தில் #G20India சின்னம், நமது தேசியக்கொடி பொறித்த பாரம்பரிய ஆடையை அணிந்து உலக அரங்கில் அடியெடுத்து வைப்பது ஒவ்வொரு இந்தியருக்கும், தமிழருக்கும் பெருமிதமான தருணம் என அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த விழாவில் ஆஸ்கார் விருது வென்ற, தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ் பட தயாரிப்பாளர் குனீத் மொங்காவுடனும் அவர் ஒன்றாக தோன்றினார்.
விழாவில் அவர் கூறும்போது, எனது சட்டையில் உள்ள எம்பிராய்டரி வடிவமைப்பை, என்னுடைய உள்ளூர் தையல்காரர் மேற்கொண்டார். எனது நெஞ்சில் மூவர்ணம் அணிந்தது அதிக பெருமையுடையவராக என்னை ஆக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு, முதன்முறையாக கவுரவத்திற்கான நாடாக அதிகாரப்பூர்வ முறையில் இந்தியாவின் பெயர் அறிவிக்கப்பட்டு இருந்தது.