ஐஸ்வர்யா ராயை விட எனக்கு சம்பளம் குறைவு -நடிகர் பிருதிவிராஜ்
|நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரையுலகில் தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து நடிகர் பிருதிவிராஜ் கூறும்போது,
''நடிகர்களின் சம்பளம் அவர்களின் நட்சத்திர அந்தஸ்தை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. ஒரு நடிகர் அதிக சம்பளம் கேட்கிறார் என்று கருதினால் அவரை வைத்து தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. படங்களை தயாரிக்கும்போது அவற்றில் நடிகர்களும் ஒரு பங்குதாரராக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. நடிகர்களின் சம்பளம் அவர்கள் நடிக்கும் படங்களின் வெற்றி தோல்வியை வைத்தே முடிவு செய்யப்படுகிறது. நான் வாங்கும் சம்பளமும் அப்படித்தான். நடிகர்களுக்கு இணையாக சம்பளம் கேட்க கதாநாயகிகளுக்கும் உரிமை உள்ளது. ஆனாலும் நட்சத்திர அந்தஸ்தை வைத்துதான் சம்பளம் கொடுக்கிறார்கள். நான் 'ராவணன்' படத்தில் நடித்தபோது எனக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் ஒரேமாதிரி சம்பளம் தரவில்லை. அந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் என்னைவிட அதிகமாக சம்பளம் வாங்கினார். மலையாள நடிகைகளில் மஞ்சு வாரியர் அதிக சம்பளம் பெறுகிறார். அவருடன் புதுமுக நடிகர் நடித்தால் அந்த நடிகருக்கு மஞ்சுவாரியரை விட அதிக சம்பளம் கொடுக்கமாட்டார்கள்" என்றார்.