இதை நான் அரசியலுக்காக செய்யவில்லை .... அனைத்து மத கடவுளும் எனக்கு ஒன்றுதான்- நடிகர் விஷால்
|நடிகர் விஷால், சாப்பிடுவதற்கு முன் மூன்று மதத்தின் கடவுள்களையும் வணங்கிவிட்டு சாப்பிட தொடங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
சென்னை,
நடிகர் விஷால் வி.ஐ.டி வைப்ரன்ஸ் பெஸ்ட் 2024 என்கிற கல்லூரி விழாவில் பங்கேற்றார். விஷாலின் அடுத்த படமான "ரத்னம்" படத்தின் முதல் பாடல் அங்கு வெளியிடப்பட்டது. ரத்னம் படக்குழுவினர் இயக்குனர் ஹரி, சமுத்திரகனி, தேவி ஸ்ரீ பிரசாத் என அனைவரும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதில் ரசிகர்கள் நடிகர் விஷாலிடம் சில கேள்விகளைக் கேட்க அதற்கு அவர் பதிலளித்திருந்தார். அதில் ஒருவர், 'நீங்க சாப்பிடுவதற்கு முன் மூன்று மதங்களின் கடவுளையும் வணங்குவதற்கானக் காரணம் என்ன?' என்று விஷாலிடம் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த நடிகர் விஷால்,
"நான் 10 ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறேன். எனக்கு எல்லா மதங்களின் கடவுள்களும் ஒன்றுதான். இதுபற்றி என்னிடம் நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். எனது கழுத்தில் இந்து, முஸ்லிம் என அனைத்து மதத்தின் கயிறும் உள்ளது. இதை நான் பிரபலமாக வேண்டும் என்பதற்காக செய்யவில்லை.
நான் சாப்பிடும் சாப்பாடு, போடும் துணி, ஷூ என அனைத்தையும் இந்த சாமிகள் எனக்கு கொடுத்து இந்த இடத்தில் என்னை நிற்க வைத்து அழகு பார்க்கிறார்கள். இதனால், நான் சாப்பிட்டதை ட்ரோல் செய்பவர்கள் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். இதை நான் அரசியலுக்காகச் செய்யவில்லை. இதற்கெல்லாம் நான் விளக்கம் கொடுக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்" என்று கூறினார்.