ஆப்பிள் நிறுவன ஐபேட் விளம்பரத்தை விமர்சித்த ஹிருத்திக் ரோஷன்
|ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட விளம்பர வீடியோவிற்கு, பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள ஐபேட்டை விளம்பரப்படுத்த 'கிரஷ்' என்ற பெயரில் விளம்பர வீடியோ ஒன்றை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த விளம்பரத்தில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த பல்வேறு பொருட்களையும் ஒன்றாக ஒருங்கிணைத்து மிக மெல்லிசான அளவுகளில் ஐபேட் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கும் வகையில் வீடியோ காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.
பியானோ, கிடார் உள்ளிட்ட இசைக்கருவிகள், விளையாட்டு இயந்திரங்கள், புத்தகங்கள், வண்ணக் கலவைகள், ஸ்பீக்கர்கள், விளக்குகள் உள்ளிட்ட ஏராளமான கலைப் பொருட்கள், பிரம்மாண்ட நசுக்கும் இயந்திரத்தின் அடியில் வைத்து மொத்தமாக அழிக்கப்படுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இது கலைத்துறையினரிடையே கடுமையான விமர்சனங்களை உருவாக்கி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் வெளியிட்டிருந்த இந்த வீடியோவின் பின்னூட்டத்தில், பிரிட்டிஷ் நடிகர் ஹியூக் கிராண்ட் கடும் விமர்சனங்களை முன் வைத்திருந்தார். 'பல ஆண்டுகளாக மனிதர்களின் கற்பனை திறன் மற்றும் அனுபவத்தில் உருவாக்கப்பட்ட கலைகளை, தொழில்நுட்பம் எந்த அளவிற்கு அழிக்கிறது என்பதை இது காட்டுகிறது' என அவர் விமர்சித்து இருந்தார்.
பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'ஆப்பிள் நிறுவனத்தின் புதிய விளம்பரம் மிகவும் சோகமானதாகவும், அறியாமையில் உருவாக்கப்பட்டதாகவும் இருக்கிறது' என்று அவர் பதிவிட்டுள்ளார்.