காதலிக்கு ரூ.100 கோடி வீடு பரிசா? ஹிருத்திக் ரோஷன் விளக்கம்
|நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது காதலிக்கு ரூ.100 கோடி மதிப்புள்ள வீடு கொடுத்து அவருடன் தங்க போவதாக வெளியான செய்திக்கு விளக்கமளித்துள்ளார்.
இந்தியில் 'பியார் ஹே' படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் ஹிருத்திக் ரோஷன். கிரிஷ், தூம், ஜோதா அக்பர், கோயி மில் கயா உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார்.
ஹிருத்திக் ரோஷன் 2000-ம் ஆண்டு சூசன்கானை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹிரேகான், ஹிருதன் ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். 14 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இருவரும் 2014-ல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.
தற்போது ஹிருத்திக் ரோஷனுக்கும், நடிகையும் பாடகியுமான சபா ஆசாத்துக்கும் காதல் மலர்ந்துள்ளது. விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மும்பை ஜுஹூ பகுதியில் கடற்கரையை நோக்கி இருக்கும் பெரிய பங்களா வீட்டை ரூ.100 கோடியில் விலைக்கு வாங்கி சபா ஆசாத்துக்கு ஹிருத்திக் ரோஷன் பரிசாக வழங்கி இருப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
இதற்கு பதில் அளித்து ஹிருத்திக் ரோஷன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ''இந்த தகவலில் உண்மை இல்லை. பிரபலங்களை பற்றி வதந்திகள் பரவுவது வழக்கம் என்பது எனக்கு தெரியும். ஆனால் தவறான தகவலை பகிர வேண்டாம்" என்று கூறியுள்ளார்.