ஹிருத்திக் ரோஷனின் 'வார் 2' படத்தில் இணையும் ஜூனியர் என்.டி.ஆர்
|ஹிருத்திக் ரோஷனின் 'வார் 2' படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஆக்சன் திரில்லர் படமான 'வார்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் டைகர் ஷ்ராப் மற்றும் வாணி கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப்படம் யாஷ் ராஜ் பிலிம்ஸின் கீழ் ஆதித்யா சோப்ராவால் தயாரிக்கப்பட்டது.
தற்போது யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் 'வார் 2' படத்தை தயாரிக்க உள்ளனர். இந்தப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் மீண்டும் மேஜர் கபீர் தலிவாலாக நடிக்க உள்ளார். ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை, டைகர் 3, வார் மற்றும் பதான் போன்ற பிரம்மாண்டமான படங்களுக்குப் பிறகு ஒய்.ஆர்.எப் ஸ்பை யுனிவர்ஸின் 6-வது படமான 'வார் 2' படத்தினை ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார். இந்த படத்தை 'பிரம்மாஸ்திரா' பட இயக்குனர் அயன் முகர்ஜி இயக்குகிறார்.
ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இருவரும் இணைந்து நடிக்கும் இந்தப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஜூனியர் என்.டி.ஆர்-க்கு ஜோடியாக நடிக்க நடிகை ஷர்வரி வாக் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்தப்படம் ஆகஸ்ட் 2025-ல் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.