மணிப்பூரைப் பற்றிய பதில்களைப் பெறாமல் இருப்பது எவ்வளவு அவநம்பிக்கையானது? - பிரகாஷ் ராஜ்
|நம் நாட்டில் சொல்லப்படும் கதைகள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 8-ந்தேதி தொடங்கிய சர்வதேச திரைப்பட விழா (IFFK) நேற்று நிறைவடைந்தது. இதன் நிறைவு விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பு விருந்திரனாக கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசியபோது அவர் கூறியதாவது;-
"கேரள மக்களின் அன்பு, அரவணைப்பு, நம்பிக்கை ஆகியவற்றால் இங்கு வருவது எப்போதும் எனக்கு மகிழ்ச்சியைத் தரும். குறிப்பாக கடவுளின் சொந்த நாடாக இருப்பதால், அரசியலில் இருந்து கடவுளை ஒதுக்கி வைக்கிறீர்கள். உங்கள் அரசு, சிறந்த சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் இது போன்ற விழாவை நடத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
நம் நாட்டில் சொல்லப்படும் கதைகள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் பல்வேறு கோணங்களில் கதைகள் சொல்லப்படுகின்றன. உதாரணமாக, நாடாளுமன்றம் மீதான தாக்குதல் சம்பவத்தில், போராட்டம் நடத்த விரும்பிய 6 பேரைப் பற்றிய கதைகளைப் பார்க்கிறோம். மேலும், சண்டையிடும் பத்திரிகையாளர்கள், ஆளுங்கட்சியை குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் எதிர்க்கட்சியுடன் இருப்பது போன்ற புகைப்படம் இருப்பதாக கூறும் ஆளுங்கட்சியினர் ஆகியோரைப் பார்க்கிறோம்.
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு என்ன என்பதுதான் மற்றுமொரு கதை. அந்த இளைஞர்களை இதைச் செய்ய வைத்தது எது? என்பதைப் பற்றிய கதையும் சொல்லப்படலாம். அதே சமயம், வேலையில்லாமல் இருப்பது எவ்வளவு அவநம்பிக்கையானது, மணிப்பூரைப் பற்றிய பதில்களைப் பெறாமல் இருப்பது எவ்வளவு அவநம்பிக்கையானது மற்றும் விரக்தியானது என்ற கோணத்திலும் கதை சொல்லப்படுமா?"
இவ்வாறு பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.