விக்ரம் படத்தில் ஹாலிவுட் நடிகர்
|விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்' படத்தில் இங்கிலாந்தை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.
பா.ரஞ்சித் இயக்கும் 'தங்கலான்' படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். சுதந்திர போராட்ட கால கட்டத்தில் கோலார் தங்க வயல் பகுதியில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து 3-டி தொழில்நுட்பத்தில் இந்த படம் தயாராகிறது.
மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலர் நடிக்கின்றனர். விக்ரமின் மிரட்டலான தங்கலான் பட தோற்றம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது 'தங்கலான்' படத்தில் இங்கிலாந்தை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.
டேனியல் கால்டாகிரோன் புகைப்படத்தை விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு "வேட்டைக்காரரான டேனியல் கால்டாகிரோனை தங்கலான் திரைப்படத்திற்கு வரவேற்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
டேனியல் கால்டாகிரோன் 'தி பீச்', 'தி பியானிஸ்ட்' தி கிரேடில் ஆப் லைப் உள்பட 16 ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 'தி பியானிஸ்ட்' படம் ஆஸ்கார் விருது பெற்றது. டேனியல் கால்டாகிரோன் தங்கலான் படத்தில் இணைந்துள்ளதன் மூலம் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.