இந்து அமைப்புகள் பிருதிவிராஜ் நடிக்கும் படத்துக்கு எதிர்ப்பு
|பிருதிவிராஜ் நடிக்க உள்ள புதிய படத்துக்கு ‘குருவாயூரம்பல நடையில்' என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்திற்கு கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
மலையாள திரை உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் பிருதிவிராஜ். இவர் தமிழில் 'மொழி' படத்தில் நடித்து பிரபலமானார். கனா கண்டேன், பாரிஜாதம், சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, அபியும் நானும், காவிய தலைவன் போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார்.
தற்போது பிருதிவிராஜ் நடிக்க உள்ள புதிய படத்துக்கு 'குருவாயூரம்பல நடையில்' என்று பெயர் வைத்துள்ளதாகவும், விபுன் தாஸ் டைரக்டு செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ''குருவாயூரப்பன் தெய்வத்தின் பெயரை படத்துக்கு வைத்து கதையை திரித்து சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அது நடக்காது. பெயரை மாற்ற வேண்டும்'' என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தின் பெயரை காரணமாக வைத்து பிருதிவிராஜுக்கு மிரட்டல் விடுப்பதை ஏற்க முடியாது என்று மலையாள பட உலகினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.