யூடியூப்பில் 400 மில்லியன் பார்வையை கடந்த 'டியர் காம்ரேட்'
|ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'டியர் காம்ரேட்' படம் யூடியூப்பில் மட்டுமே 40 கோடி (400 மில்லியன்) பார்வைகளைக் கடந்துள்ளது.
சென்னை,
இயக்குனர் பாரத் கம்மா இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த காதல் மற்றும் அதிரடி திரைப்படம் 'டியர் காம்ரேட்'. இப்படத்தினை தயாரிப்பாளர் நவீன் ஏர்னெனி தயாரிக்க, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கன்னடத்தில் நடித்து வந்த ராஷ்மிகா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக 'கீதா கோவிந்தம்' படத்தில் நடித்து பிரபலம் ஆனார்.
கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இன்றுடன் இப்படம் வெளியாகி ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா ஒரு கோபமான இளைஞராகவும், நடிகை ரஷ்மிகா மந்தான கிரிக்கெட் வீராங்கனையாகவும் நடித்தனர். படத்தில் ராஷ்மிகா மந்தனா அநீதிக்கு எதிராக போராடும் போது அவரை விஜய் தேவரகொண்டா எப்படி ஆதரிக்கிறார் என்பதாக அமைந்துள்ளது இப்படம்.
இந்த படத்தினை இந்தியில் டப்பிங் செய்து கோல்ட்மைன்ஸ் டெலிபிலிம்ஸ் நிறுவனம் யூடியூப்பில் வெளியிட்டது. இந்த நிலையில் இந்தியில் டப்பிங் செய்த 'டியர் காம்ரேட்' படம் சுமார் 400 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இது குறித்து விஜய் தேவரகொண்டா "2019 வெளியீட்டின்போது சோகமாக இருந்தோம். ஆனால் தற்போது வரை இந்தப் படத்துக்காக அளவற்ற அன்பு கிடைத்து வருகிறது. மிகவும் பிடித்த படம் டியர் காம்ரேட்" எனக் கூறியுள்ளார். ராஷ்மிகா இதனைப் பகிர்ந்து , "400 மில்லியன் லவ். டியர் காம்ரேட் எப்போதும் எனக்கு சிறப்பான படம்" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தநிலையில், தற்போது ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2, தனுஷுடன் குபேரா, சல்மான் கானுடன் சிக்கந்தர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும், விஜய் தேவரகொண்டா விடி-12 என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடித்த 'டியர் காம்ரேட்' படம் வெளியாகி 5 வருடங்கள் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.