கதாநாயகிகளுக்கு அதிக சம்பளம் வேண்டும் - நடிகை மதுபாலா
|தமிழில் ரோஜா, ஜென்டில்மேன் படங்களில் நடித்து பிரபலமான மதுபாலா திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார். தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் சாகுந்தலம் படத்தில் மேனகை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மதுபாலா அளித்துள்ள பேட்டியில், "நான் சினிமா துறைக்கு வந்தபோது ஹீரோவுக்கு சமமாக சம்பளம் கேட்க வேண்டும் என்று யோசிக்கவில்லை. திரையில் தோன்றினால் போதும் என்றே நினைத்தேன். பட வாய்ப்புக்காக ஒரு நாளும் போராடவில்லை. நான் சினிமா துறைக்கு வந்த புதிதில் ஆக்ஷன் படங்களே அதிகமாக வந்து கொண்டிருந்தன. அதில் கதாநாயகிகளுக்கு குறைவான காட்சிகளே இருக்கும்.
முக்கியமான காட்சிகள் எல்லாம் ஹீரோக்கள்தான் செய்ய வேண்டி இருந்தது. அதனால் அவர்களுக்கு அதிக சம்பளம் வரும். ஆனால் கங்கனா ரனாவத், தீபிகா படுகோனே போன்ற நடிகைகள் கதை முழுவதையுமே தங்கள் தோளில் சுமக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு ஹீரோவுக்கு சமமான சம்பளம் கொடுக்க வேண்டும்.
நான் யாரையும் குறை சொல்லவில்லை. எத்தனையோ ஹிட் படங்களில் நடித்தேன். இப்போதும் என்னை எவ்வளவோ பேர் கவுரவிக்கின்றனர். சினிமா துறையில் தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை பகிரங்கமாக தைரியமாக வெளிப்படுத்தி கேள்வி கேட்கும் கதாநாயகிகளை எல்லோருமே ஊக்குவிக்க வேண்டும்'' என்றார்.