'என் வாழ்க்கையில் அவர் ரொம்ப முக்கியம்' - விஜய் தேவரகொண்டா குறித்து மனம் திறந்த ராஷ்மிகா
|விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்படுகிறது.
சென்னை,
தெலுங்கு திரையுலகில் இளம் நடிகர்களாக வலம் வருபவர்கள் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா. இருவரும் தமிழ், தெலுங்கு என பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த 'கீதா கோவிந்தம்' திரைப்படம் பல இளம் ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்படுகிறது. ஒருவர் வீட்டில் ஒருவர் அடிக்கடி விருந்து சாப்பிடுவதாகவும் பேசப்படுகிறது. சமீபத்தில் வெளிநாட்டு கடற்கரையில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் சுற்றித்திரிந்தது கிசுகிசுக்களுக்கு தீனி போடும் விதமாக அமைந்தது.
இதற்கிடையில் இருவரும் பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளதாகவும், விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியானது. இந்த தகவல் பொய்யானது என நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கம் அளித்து இருந்தார்.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா குறித்து நடிகை ராஷ்மிகா மனம் திறந்து பேசியுள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், 'நானும் விஜய்யும் ஒன்றாகதான் வளர்ந்தோம். என்னுடைய வாழ்க்கையில் எது நடந்தாலும் விஜய்யிடம் ஆலோசனை கேட்டுதான் செய்வேன். நான் என்ன சொன்னாலும் அதற்கு ஆமாம் போடுபவர் கிடையாது விஜய். நல்லது, கெட்டதை அறிந்து சொல்லக்கூடியவர்.
என் வாழ்வில் எல்லாரையும் விட எனக்கு ஆதரவாக அவர் இருக்கிறார். என் வாழ்க்கையில் அவர் ரொம்ப முக்கியம். உண்மையில் நான் மதிக்கும் ஒரு நபராக விஜய் தேவரகொண்டா உள்ளார்' என்று தெரிவித்து உள்ளார். இவரின் இந்த பேச்சு இவர்களின் காதல் கிசுகிசுக்களுக்கு மீண்டும் பிள்ளையார் சுழி போட்டு உள்ளது.