< Back
சினிமா செய்திகள்
மனிதராக இருக்கவே தகுதியற்றவர்.. பிரதமர் மோடியை விமர்சித்த நடிகர் கிஷோர்
சினிமா செய்திகள்

மனிதராக இருக்கவே தகுதியற்றவர்.. பிரதமர் மோடியை விமர்சித்த நடிகர் கிஷோர்

தினத்தந்தி
|
19 May 2024 5:33 PM IST

பிரதமர் மோடி பெரிய பொய்யர் என்றும் மனிதராக இருக்கவே தகுதியில்லாதவர் என்றும் நடிகர் கிஷோர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழில் வெண்ணிலா கபடி குழு, ஆடுகளம், சார்பட்ட பரம்பரை, பொன்னியின் செல்வன், ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் நடிகர் கிஷோர் நடித்துள்ளார்.

கடந்த சில காலமாக நடிகர் கிஷோர் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

நடிகர் கிஷோர் பிரதமர் மோடியை விமர்சித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், "மோடி பொது வாழ்க்கைக்கு மட்டுமல்ல, மனிதனாக இருக்கவும் தகுதியில்லாதவர். இவரை போன்ற ஒருவரின் வாய், மரியாதை மிக்க கடவுள் ராமரின் பெயரை உச்சரிப்பது என்பது பாவச்செயல். உண்மைக்கு புறம்பான, நெறிமுறையற்ற கருத்துகளை கூறுவதால் அவர் வெட்கப்பட வேண்டும்.

அவரது வார்த்தைகள், செயல்பாடுகள் என அனைத்தும், உலகில் அவரை விட பெரிய பொய்யர், பெரிய கோழை, அதிக திமிர் கொண்டவர், மோசமானவர், கொடூரமானவர், முட்டாள், கீழ்த்தரமானவர், உணர்வற்றவர், மக்களுக்கு எதிரானவர், ஆபத்து நிறைந்தவர், ஊழல் நிறைந்த சர்வாதிகாரி என்பதை காட்டுகிறது.

பாஜக ஆட்சியில் இருந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும், விவசாயிகள், இராணுவ வீரர்கள், பெண்கள், குழந்தைகள், மருத்துவமனைகள், கல்லூரிகளின் வளர்ச்சி குறித்தும், செய்த பணிகள் குறித்தும் பேசும் திறன் மோடிக்கு இல்லை. வெறும் பொய் சொல்லி வெறுப்பை மட்டுமே பரப்புகிறார். மேலும் கற்பனையாக வாக்கு ஜிகாத், ஊடுருவல்காரர்கள், பாகிஸ்தானியர்கள் என்று இந்த நாட்டு மக்களை கூறி வருகிறார்.

அதோடு பிற கட்சியை சுட்டிக்காட்டி அவர்கள் உங்கள் வீடு, எருமை, சைக்கிள் உள்ளிட்ட சொத்துகளை எடுத்து கொள்வார்கள் என்றும், கோயில்களை பூட்டிவிடுவார்கள் என்றும் பேசி வருகிறார். இப்படியான அதிகாரப்பசி மற்றும் போலி இந்துவாக நடந்து கொள்வதால் இஸ்லாம் எப்படி பயங்கரவாதிகளால் இழிவுப்படுத்தப்பட்டதோ, அதேபோல் மோடியால் இந்து மதம் இழிவுப்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக நடிகர் கிஷோர், மோடியை விமர்சித்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு வைரலானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்