'மும்பையில் குடியேறினேனா?' நடிகர் சூர்யா விளக்கம்
|சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கும் 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக திஷா பதானி நடிக்கிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.
இந்த நிலையில் சூர்யா மும்பையில் 9 ஆயிரம் சதுர அடியில் ரூ.70 கோடி மதிப்புள்ள புதிய வீட்டை வாங்கியிருப்பதாகவும், தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் அந்த வீட்டில் குடியேற இருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்பு தகவல் பரவியது.
தொடர்ந்து மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சூர்யாவும், ஜோதிகாவும் வெளியே வரும் புகைப்படங்களும், ஓட்டல்களுக்கு சென்று வரும் படங்களும் வெளியாகி வைரலானது. மும்பை வீட்டில் நிரந்தரமாக குடியேறிவிட்டதாகவும் கூறப்பட்டது.
இதனை சூர்யா திட்டவட்டமாக மறுத்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சூர்யா இது தொடர்பான கேள்விக்கு, பதில் அளித்து பேசும்போது, ''நான் மும்பையில் குடியேறிவிட்டதாக வரும் தகவல்கள் உண்மையில்லை. மும்பையில் படிக்கும் எனது குழந்தைகளை பார்ப்பதற்காகவே அங்கு அடிக்கடி செல்கிறேன்'' என்று விளக்கம் அளித்துள்ளார்.
இதன்மூலம் மும்பையில் குடியேறியதாக பரவிய வதந்திகளுக்கு சூர்யா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.