வாழ்க்கையில் நன்றி உணர்வு வேண்டும் - நடிகை சாய்பல்லவி
|வாழ்க்கையில் நன்றி உணர்வு வேண்டும் என்று நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் வலைத்தளம் பக்கம் வந்த நடிகை சாய்பல்லவி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
சினிமா துறையில் சாய்பல்லவிக்கு தனித்துவமான இடம் உள்ளது. படங்களின் வெற்றி தோல்வியை கணக்கில் எடுக்காமல் அவரை நேசிக்கும் ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். அதனால் தான் சாய்பல்லவியின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்படி இயக்குனர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.
ஹீரோ யார் என்பதை பற்றி கண்டுகொள்ளாமல் வித்தியாசமான கதாபாத்திரம் இருந்தால் போதும் நடிக்க தயார் என்று சாய்பல்லவி தொடர்ந்து சொல்லி வருகிறார். தெலுங்கு ரசிகர்கள் சாய்பல்லவியை செல்லமாக 'லேடி பவர் ஸ்டார்' என்று அழைக்கின்றனர். ஆனால் சமீப காலமாக சாய்பல்லவிக்கு நேரம் சரியில்லை என்று திரையுலகினர் கிசுகிசுக்கின்றனர்.
காரணம் அவரது நடிப்பில் வந்த சில படங்கள் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. சாய்பல்லவியின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தாலும் தயாரிப்பாளர்களுக்கு அந்த படங்களால் லாபம் கிடைக்கவில்லை.இதனால் நடிப்புக்கு கொஞ்சம் இடைவெளி விட்டு இருந்தார். சமூக வலைத்தளத்திலும் கருத்துகள் பதிவிடாமல் ஒதுங்கி இருந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் வலைத்தளம் பக்கம் வந்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.அதில், "வாழ்க்கையில் புன் சிரிப்பு, ஆசை, நன்றி உணர்வு இருந்தால் போதும்'' என்ற பதிவுடன் அழகாக சிரிக்கும் தனது புகைப் படத்தையும் வெளியிட்டு உள்ளார். இது தற்போது வைரலாகிறது.