தமிழ் ஹீரோ அத்துமீறினாரா? நித்யாமேனன் விளக்கம்
|தமிழில் ஒரு ஹீரோ என்னிடம் அத்துமீறி துன்புறுத்தினார் என்று நித்யாமேனன் சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் பேசினார்.
தமிழில் வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி, 24, இருமுகன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நித்யாமேனன், கடைசியாக தனுஷ் ஜோடியாக திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து இருந்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
நித்யாமேனன் சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசும்போது, 'தெலுங்கு படங்களில் நடிக்கும்போது எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் தமிழில் ஒரு ஹீரோ என்னிடம் அத்துமீறி துன்புறுத்தினார். இதுபோல் நிறைய பிரச்சினைகளை தமிழ் திரையுலகில் எதிர்கொண்டேன்' என்று தெரிவித்தாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதனை நித்யாமேனன் மறுத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நித்யாமேனன் வெளியிட்டுள்ள பதிவில், 'இது முற்றிலும் தவறான தகவல், அப்படி நான் எங்கேயும் பேசவில்லை. இந்த போலியான தகவலை பரப்பியவரை அடையாளம் காட்டுங்கள். குறுகிய காலம்தான் இருக்க போகிறோம். இதுபோன்று நடக்கும் தவறுகள் ஆச்சரியத்தை தருகிறது. வெளிஉலகத்துக்கு சொல்வதால் மட்டுமே இந்த கேவலமான செயலை நிறுத்த முடியும் என்பதால் சுட்டிக்காட்டி உள்ளேன். நல்ல மனிதர்களாக இருங்கள்' என்று கூறியுள்ளார்.