ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
|அபராதத்திற்கு இடைக்கால தடைவிதித்து இந்த வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கடந்த 2010-ம் ஆண்டு மசராட்டி எனும் இத்தாலி சொகுசு காரை இறக்குமதி செய்தார். அதை தமிழகத்தில் இயக்குவதற்கு ஏதுவாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்த போது இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி செலுத்தவில்லை என்று அந்த வாகனத்தை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகம் மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ரூ.11,50,952 நுழைவு வரி செலுத்தக் கோரி கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நுழைவு வரியும் அபராதமும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் ரூ.11,50,952 நுழைவு வரி செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஹாரிஸ் ஜெயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் 2012-ம் ஆண்டு இந்த காரை விற்று விட்டதாகவும் அதற்கு ஏற்கனவே நுழைவு வழியாக ரூ.11,50,000 செலுத்தப்பட்டு விட்டதாகவும் அந்த மனுவில் தெரிவித்து இருக்கிறார்.
நுழைவு வரி தொடர்பான வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி சில வழக்குகளில் நுழைவு வரியை மட்டும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் தனக்கு அபராதத்துடன் செலுத்த வேண்டும் என்று தனக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நுழைவு வரி செலுத்தி விட்ட நிலையில், தனக்கு மட்டும் அபராதமும் விதித்தது அரசியல் சட்டத்தின் சமத்துவ உரிமைக்கு எதிரானது என்றும் அபராதம் செலுத்துவதற்கு தடை விதிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அபராதத்திற்கு இடைக்கால தடைவிதித்து இந்த வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.