< Back
சினிமா செய்திகள்
லப்பர் பந்து படத்தின் வெற்றி விழாவில் ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி
சினிமா செய்திகள்

'லப்பர் பந்து' படத்தின் வெற்றி விழாவில் ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி

தினத்தந்தி
|
26 Sept 2024 6:10 PM IST

‘லப்பர் பந்து’ படத்தை பற்றி மக்கள் கூறியதுதான் படத்தின் வெற்றி என நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள லப்பர் பந்து படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ஸ்வாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணன், தேவ தர்ஷிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என ரசிகர்களிமிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்துள்ளன. கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்பப் படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த ஆட்டக்காரராக இருக்கும் அட்டக்கத்தி தினேஷுக்கும், அவருக்கு நிகராகச் சிறந்த ஆட்டக்காரராக இருக்கும் துடிதுடிப்பான இளைஞர் ஹரிஷ் கல்யாணுக்குமிடையே நடக்கும் உணர்வு மோதல்களைக் கதைக்களமாகக் கொண்டு, கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம்.

இந்நிலையில், 'லப்பர் பந்து' திரைப்படத்தின் வெற்றி விழா சென்னை வடபழனியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, இசையமைப்பாளர் சான் ரோல்டன், நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், பால சரவணன், டி.எஸ்.கே, காளி வெங்கட், பாலசரவணன் மற்றும் நடிகைகள் சஞ்சன், தேவதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் வெற்றி விழாவில் ஹரிஷ் கல்யாண் பேசியதாவது: 'படத்தை மக்களிடம் கொண்டு சென்றதுக்கும் இயக்குநரின் எழுத்தைக் கொண்டாடியதுக்கும் பத்திரிகையாளர்களுக்கு மிக்க நன்றி. விஜயகாந்த் சாரின் ஆசிர்வாதம் எங்களுக்கு மிகவும் உதவியது. அவரது குடும்பத்தினை சந்தித்ததில் மகிழ்ச்சி. எனது அப்பா எதையும் தலைக்கு எடுத்துக்கொண்டு போகாதே, இதயத்தில் வைத்துக்கொள் என்பார். அதுபோல, இந்த நெகிழ்ச்சியான வெற்றியை இதயத்துக்குள் வைத்து கொள்கிறேன்.மக்கள் இந்தப் படத்தை இவ்வளவு கொண்டாடுவார்கள் என நினைக்கவில்லை.

திரையரங்குக்கு சென்று படம் பார்த்தேன். வசூலினைவிட அது மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினேன். அதற்கு அங்கிருந்த ஒருவர் எழுந்து, 'உங்களைவிட படம் பார்த்து இரண்டு மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என கூறினார். அதுதான் உண்மையான வெற்றியாக இருக்குமென நினைக்கிறேன். இயக்குனர் தமிழும், நானும் ஒரு அண்ணன் தம்பி போல் பழகியுள்ளோம். எனக்கு கிரிக்கெட் விளையாடுவது மிகவும் பிடிக்கும்' என்றார்.

மேலும் செய்திகள்